Wimbledon 2022: 7வது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்று சாம்ப்ரஸ் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்
விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் முக்கியமான ஒன்றான விம்பிள்டன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆடவர் அரையிறுதி சுற்று போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காயம் காரணமாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த ரஃபேல் நடால் விலகினார். இதனால் முதல் அரையிறுதிப் போட்டியில் கிரியோஸ் வெற்றி பெற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டார். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் கேமரூன் நோரியை 2-6,6-3,6-2,6-4 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றார்.
இந்நிலையில் இன்று நடப்புச் சாம்பியன் ஜோகோவிச் மற்றும் கிரியோஸ் இடையேயான இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் செட்டில் கிரியோஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் முதல் செட்டை 6–4 என்ற கணக்கில் வென்று அசத்தினார். அதன்பின்னர் இரண்டாவது செட்டில் ஜோகோவிச் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக விளையாட தொடங்கினார். இரண்டாவது செட்டை ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரு வீரர்களும் தலா 1 செட்டை வென்று இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மூன்றாவது செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி கேம்களை வென்று வந்தனர். இருவரும் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். அதன்பின்னர் ஜோகோவிச் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மூன்றாவது செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அசத்தினார். அடுத்து நடைபெற்ற நான்காவது சுற்றில் இரு வீரர்களும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருவரும் 5-5 என்ற கணக்கில் கேம்களை வென்று இருந்தனர். அடுத்து இருவரும் 6-6 என்ற கணக்கில் இருந்தனர். இதனால் நான்காவது செட் டைபிரேக்கருக்கு சென்றது. அந்த டைபிரேக்கரை ஜோகோவிச் 6-4 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 4-6,6-3,6-4,,7-6 என்ற கணக்கில் போட்டியை வென்றார்.
Magnificent.
— Wimbledon (@Wimbledon) July 10, 2022
In its 100 years, Centre Court has seen few champions like @DjokerNole#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/vffvL2f08Q
இதன்மூலம் 7வது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று அசத்தினார். பீட் சாம்ப்ரஸ் விம்பிள்டன் பட்டத்தை 7 முறை வென்றுள்ளார். அதிகபட்சமாக விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் 8 முறை வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்