(Source: ECI/ABP News/ABP Majha)
Untold Stories 10 : நெல்சன் மண்டேலாவையே நெகிழவைத்த கால்பந்து புரட்சியாளர் விஜய் பார்சே...! அப்படி என்ன செய்தார்..?
விளையாட்டு உலகில் நாம் இதுவரை அறிந்திராத பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை அன்டோல்ட் ஸ்டோரி என்ற தொடர் மூலம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம்.
உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் விளையாட்டுகளில் முதலிடத்தில் இருப்பது கால்பந்து. இந்த விளையாட்டு மூலம் புகழ்பெற்ற பலரும் ஏழ்மையான பின்னணியில் இருந்து, பின்னர் உலகப்புகழ்பெற்றவர்களாக உலா வந்தவர்கள். அவர்களைப் போல சாதாரண குடிசையில் வாழும் குழந்தைகளும் கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சகாப்தத்தையே படைத்தவர்தான் விஜய் பார்சே.
விஜய் பார்சே நாக்பூரில் உள்ள ஹிஸ்லோப் கல்லூரில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றினார். 2000ம் ஆண்டில் தொடக்கத்தில் சில குழந்தைகள் கொட்டும் மழையில் உடைந்த வாளியை கொண்டு கால்பந்து ஆடிக்கொண்டிருந்தனர். ஒரு விளையாட்டு ஆசிரியராக அவர்களை திறமையை கண்ட விஜய்க்கு அவர்கள் உடைந்த வாளியில் கால்பந்து ஆடியது வேதனை அளித்துது. உடனே அவர்களுக்கு அவர் ஒரு கால்பந்தை அன்பளிப்பாக அளித்தார். அதேபோல, மற்றொரு முறை இன்னும் சில சிறுவர்கள் டென்னிஸ் பந்தில் கால்பந்து ஆடுவதை கண்டார்.
குடிசைப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் பலரும் தவறான பாதைக்கு செல்வதாக அறிந்த விஜய் பார்சே மிகவும் வேதனைப்பட்டார். இதற்கு தீர்வு காண விரும்பிய அவர் இந்த குழந்தைகளை ஒரு விளையாட்டு மைதானத்தில் சேர்த்து, இந்த இளம் குழந்தைகள் களத்தில் இருக்கும் வரை, அவர்கள் தீமைகளில் இருந்து விலகி இருப்பார்கள் என்று நம்பினார்.
இதனால், அவர் 2002-ஆம் ஆண்டு சோபட்பட்டி கால்பந்து என்ற தொடர் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்தியில் சோபட்பட்டி என்றால் குடிசைப்பகுதி என்று அர்த்தம். விஜய் பார்சேவுடன் இணைந்து பணியாற்றிய சிலர் இந்த பெயரை மாற்றுமாறு அறிவுறுத்தினர். ஆனால், விஜய் பார்சே, “ இந்த தொடரில் விளையாட வரும் அனைவரும் குடிசைகளில் இருந்தே விளையாட வருகின்றனர் என்று எனக்கு தெரியும். நான் அவர்களுக்காகதான் உழைக்கிறேன். இதனால், நான் இந்த பெயரிலே இந்த தொடரை தொடர்ந்து நடத்துவேன்” என்றார்.
இந்த தொடர் நன்றாக வளர்ந்த பிறகு நகர அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்த தொடங்கினார். இந்தியின் பிரபல நாளிதழில் விஜய் பார்சேவின் முயற்சி குறித்து செய்தி வெளியான பிறகு, “ஸ்லம் கால்பந்து” மிகவும் புகழ்பெற்றது. தற்போது, இந்த ஸ்லம் கால்பந்து என்ற தொடர் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற தொடராக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாடு முழுவதும் இதேபோன்று குடிசைப்பகுதிகளில் உள்ள குழந்தைகள் தங்களது பயிற்சியாளர்களுடன் பங்கேற்று வருகின்றனர்.
தொடக்க காலத்தில் விஜய் பார்சே இந்த தொடரை நடத்துவதற்கு ஸ்பான்சர்கள் என்று யாருமே கிடையாது. தன்னுடைய சொந்த பணத்தை செலவிட்டு தானே எல்லாவற்றையும் நடத்தி வந்துள்ளார். விஜய் பார்சேவின் முயற்சியை பாராட்டி அமெரிக்காவில் உள்ள பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதைப்படித்து பார்த்த அமெரிக்காவில் வசித்து வந்த விஜய் பார்சேவின் மகன் தனது தந்தையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார். 2007ம் ஆண்டு இந்த ஸ்லம் கால்பந்து தொடரை உலகின் மிகவும் பிரபலமான பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டது.
விஜய் பார்சேவின் சேவையை பாராட்டி வீடற்றோர் உலககோப்பை கால்பந்து போட்டியின் இயக்குனர் ஆண்டி ஹூக்ஸ் அவரை தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு அழைத்தார். கேப்டவுன் நகருக்கு அழைக்கப்பட்ட அவர் உலகின் மறைந்த தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலாவை நேரில் சந்திக்கும் பொன்னான வாய்ப்பை பெற்றார்.
விஜய் பார்சேவை பார்த்த நெல்சன் மண்டேலா அவரது கைகளை பற்றிக்கொண்டு “என் மகனே.. நீ மிகப்பெரிய காரியத்தை செய்து கொண்டிருக்கிறாய்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். விஜய் பார்சேவின் இந்த சீரிய முயற்சியால் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கால்பந்தில் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி கடந்த 4-ஆம் தேதி ஜூந்த் என்ற படம் இந்தியில் வெளியானது. சாய்ரட் படத்தை இயக்கிய நாகராஜ் மஞ்சுளே இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் பார்சேவாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார். விஜய் பார்சே நான் கால்பந்தை வளர்ப்பதை காட்டிலும், கால்பந்து மூலமாக வளர்ச்சியை உருவாக்குகிறேன் என்றே கூறியுள்ளார்.