Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் தூத்துக்குடியைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரரான ஜெஸ்வின் ஆல்ட்ரின் பங்கேற்க உள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடர்களில் ஒன்று ஒலிம்பிக் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடரில் உலகின் பல நாடுகளில் இருந்தும் வீரர்கள், வீராங்கனைகள் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டிற்கான ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் என்ற தடகள வீரரும் தகுதி பெற்றுள்ளார். நீளம் தாண்டுதல் வீரரான ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜெஸ்வின் ஆல்ட்ரின்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் மிகப்பெரிய கனவாக கருதப்படுகிறது. சமீபகாலமாக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரினுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. வரும் ஜூலை 26ம் தேதி பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது.
தேசிய அளவில் சாதனை:
2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி பிறந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் தேசிய அளவில் நீளம் தாண்டுதலில் சாதனை படைத்துள்ளார். அவர் 8.42 மீட்டர் நீளம் வரை தாண்டியுள்ளார். இவரது தந்தை பெயர் ஜான்சன் ஐசக், தாயார் பெயர் எஸ்தர் செல்வராணி ஆகும். சிறு வயது முதலே நீளம் தாண்டுதலில் சிறந்து விளங்கும் ஜெஸ்வின் 2022ம் ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றார். ஆனால், இறுதிப்போட்டிக்கு அவரால் முன்னேற முடியவில்லை. ஆனால், 2023ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலுக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அந்த இறுதிப்போட்டியில் 12ம் இடமான கடைசி இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. இருப்பினும் அவரது விடாமுயற்சி மற்றும் பயிற்சியால் தரவரிசை அடிப்படையில் தற்போது அவருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஏற்கனவே பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகிய 5 பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி தேசியளவில் புகழ்பெற்ற ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கம் பெற்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல பிரபல வீரர்கள், வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க: ZIM vs IND T20: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி..டாஸ் வென்ற இந்தியா! பந்து வீச்சு தேர்வு!
மேலும் படிக்க:Portugal vs France, EURO 2024: சோகத்தில் ரொனால்டோ - யூரோ காலிறுதியில் ஷூட்-அவுட் முறையில் பிரான்சிடம் போர்ச்சுகல் தோல்வி