இன்லைன் ஹாக்கி: இத்தாலி சென்ற தமிழக வீராங்கனை- கனவை கலைத்த கத்தார் அதிகாரிகள்
’’கத்தார் விமான நிலைய அதிகாரிகளால் எனது கனவும், எனது மகள் மற்றும் குடும்பத்தார்களின் கனவுகள் அனைத்து பொசுங்கி விட்டது’’
இத்தாலியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அனைத்து தகுதிகளுடன் மும்பை விமான நிலையம் சென்ற ஸ்கேட்டிங் இன்லைன் ஹாக்கி வீராங்கனையை கத்தார் விமான நிறுவன அதிகாரிகள், விமானத்தில் ஏற அனுமதிக்காமல், காக்க வைத்து, அலட்சியப்படுத்தியதால், உலக அளவிலான போட்டியில் விளையாட முடியாத மன வேதனையோடு திரும்பிய தமிழக வீராங்கனை.
தஞ்சாவூர், மாதாக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் முன்னாள் தமிழக ஹாக்கி வீரர் பாஸ்கரன். இவருக்கு தேசிய ஹாக்கி வீராங்கனையும், முதல் மகளுமான மோனிஷா என்ற மகளும், +2 படிக்கும், இரண்டாவது மகள் பூர்ணிஷா (16). பூர்ணிஷா இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, மாநில, தேசிய அளவில் விளையாடி 7 பதக்கங்களை பெற்றுள்ளார். இந்நிலையில் இத்தாலி நாட்டில் இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் உலகத்தில் அமெரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, இந்தியா, ஸ்பெயின், பிரான்சு, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்றது.
இதில் பங்கேற்க கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி சண்டிகாரில் நடைபெற்ற தகுதித் தேர்வில், இந்தியாவிலிருந்து 10 பேர் கொண்ட மகளிர் அணியும், 16 பேர் கொண்ட ஆண்கள் அணியும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மகளிர் அணியில், சண்டிகார் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரும், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மூன்று பேரும், ஹரியானா மாநிலத்திலிருந்து ஒருவரும் தேர்வாகி இருந்தனர். தென் இந்தியாவிலிருந்து தஞ்சாவூரைச் சேர்ந்த பூர்ணிஷா மட்டுமே தேர்வாகியிருந்தார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி மகளிர் அணியினர் அனைவருக்கும் இத்தாலி செல்ல விசா வந்ததை அடுத்து அவர்கள் 9 பேரும் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இத்தாலிக்கு சென்றனர்.
ஆனால், பூர்ணிஷாவுக்கு மட்டும் இத்தாலி நாட்டின் விசா வர தாமதம் ஏற்பட்டதால், இணையதளத்தில் விசாவை பதிவிறக்கும் செய்து கொண்டு மும்மை விமான நிலையத்துக்குச் சென்றார். அங்கு அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொண்டு, விளையாட செல்வதற்காக தயாரானார். பின்னர் இத்தாலி நாட்டுக்கு வர இருக்கும் விளையாட்டு வீரர்களின் இத்தாலி அரசின் பட்டியலையும் விமான நிலையத்தில் சமர்பித்தார். விமான நிறுவன அதிகாரிகள் விமான நிலையத்தின் காத்திருப்பு அறையில் அமரவைத்தனர். பின்னர் விமானம் புறப்படும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு, கத்தார் விமான நிறுவன அதிகாரிகள் இத்தாலி நாட்டின் மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர், அவரை விமானத்தில் ஏற்ற மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் பெரும் மனஉளைச்சலுடன், வேதனையோடு, கண்ணீருடன் பூர்ணிஷா சொந்த ஊர் திரும்பினார்.
இதுகுறித்து பூர்ணிஷா கூறுகையில், எனது தந்தை ஹாக்கி வீரர், எனது சகோதரி மோனிஷா ஸ்கேட்டிங் விளையாட்டில் தேசிய சாம்பியன்ஷிப், எனது தாய் பள்ளி ஆசிரியையாக உள்ளார். நான் கடந்த 10 ஆண்டுகளாக இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த பயிற்சியை தஞ்சாவூர், திருச்சியில் தொடர்ந்து எடுத்து வருகிறேன். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதியானதை அடுத்து 70 ஆயிரம் செலவில் பிரத்தியோகமாக ஹாக்கி மட்டை, ஸ்கேட்டிங் ஸூ ஆகியவற்றை வாங்கி தொடர் பயிற்சியில் ஈடுபட்டேன். எனக்கு இத்தாலி நாட்டிலிருந்து விசா வர தாமதமானதால், விசாவை ஆன்லைனில் பறிவிக்கம் செய்து அதில் தமிழக அரசு, மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்கு, சென்னை, டெல்லி, மும்பை என 10 முறை விமானத்தில் அலைந்தோம். எனக்கு தமிழக அரசும், மத்திய அரசு அதிகாரிகளும் பெரும் உதவியாகவும், உறுதுணையாக இருந்து சான்றிதழ்களை பெற உதவினர்.
10 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள, கடைசியாக 9 ஆம் தேதி நான் மும்பையிலிருந்து இத்தாலி சென்று வர 1.40 லட்சம் செலவில் டிக்கெட் பதிவு செய்திருந்தோம். இதற்காக 9 ஆம் தேதி மும்பை விமான நிலையத்துக்கு சென்றதும், எனது ஆவணங்களை பரிசோதித்து, பயணிகள் காத்திருப்போர் கூடத்தில் அமர வைத்தனர். விமானம் இரவு 10 மணிக்கு புறப்படும் முன்பாக வந்த கத்தார் விமான நிறுவன அதிகாரிகள் என்னை அழைத்து இத்தாலி நாட்டின் மருத்துவ சான்றிதழ் இருந்தால் தான் விமானத்தில் ஏற முடியும் என கூறினர். நான் உடனடியாக இத்தாலி குடியுரிமை அதிகாரிகள், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டேன். அவர்கள் செல்போன் மூலம் பேசி அங்குள்ள, கத்தார் விமான நிறுவன அதிகாரிகளிடம் விளையாட்டு வீரர்களுக்கு இந்த மருத்துவ சான்று தேவையில்லை என கூறியும், ஏற்கெனவே இதே போல் வீரர்கள் சென்றுள்ளனர் என கூறியும் அதனை கத்தார் விமான நிறுவன அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் நான் விமான நிலையத்துக்குள் சென்றும், விமானத்தில் ஏறி இந்திய அணிக்காக விளையாட முடியாமல் திரும்பி விட்டேன். இந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு வேதனையாகவும், வருத்தமாகவும் இருந்தது. எனக்கு அழுகை வந்தால், கண்ணீர் விட்டு அழுது விட்டேன். அங்குள்ளவர்கள் என்னை தேற்றினர். எனக்கு நடந்த சம்பவம் போல், இனி எந்த ஒரு விளையாட்டு வீரர்களுக்கும் இந்நிலைமை ஏற்படக்கூடாது. இத்தாலியில் உலக அளவில் விளையாட செல்ல இருப்பதால், எனது பெற்றோர்கள், நான், எனது சகோதரி அனைவரும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எனக்காக பாடுபட்டார்கள். இத்தாலியில் உலக அளவில் விளையாட செல்ல இருந்த நிலையில், இதுவரை சுமார் 5 லட்சம் வரை செலவாகியுள்ளது என்றார்.
இது குறித்து பூர்ணிஷாவின் தந்தை பாஸ்கர் கூறுகையில், நான் ஸ்கூல் அளவில் மாநில அளவில் ஹாக்கி வீரர், எனது மகள் மோனிஷா, தேசிய அளவில் ஹாக்கியில் விளையாடி பல பதங்கங்களை பெற்றுள்ளார். இரண்டாவது மகள் பூர்ணிஷா, உலக அளவில் நடைபெறும் ஸ்கேட்டிங் இன்லைன் ஹாக்கி போட்டியில் விளையாட தேர்வு பெற்றார் என்ற தகவல் வந்தவுடன், எனது குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, பூர்ணிஷாவிற்காக, அனைவரும் பாடுபட்டோம். இதற்காக சென்னை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கும், உணவு, உடை, பயிற்சி உள்ளிட்டவைகளில் கவனமாக பார்த்து கவனித்து வந்தோம்.
ஆனால், மும்பை விமான நிலையத்தில் கத்தார் விமான நிறுவன அதிகாரிகள், போதுமான ஆவணங்கள் இல்லை என, காக்க வைத்து, அலட்சியப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளார்கள். எனது மகள் இத்தாலியில் சென்று விளையாடுவதற்காக, மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு பெரிதும் உதவி செய்தது. பூர்ணிஷா, 10 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வரும் நிலையில், 6 தேசிய அளவில் விளையாடி பல பதக்கங்களை பெற்றுள்ளார். நான் மாநில அளவிலும், எனது மூத்த மகள் தேசிய அளவிலும், எனது இரண்டாவது மகள் உலக அளவில் வீராங்கனை என்ற பெயர் வாங்கி விடுவார் என ஆர்வத்துடன் காத்திருந்தோம். ஆனால் கத்தார் விமான நிலைய அதிகாரிகளால் எனது கனவும், எனது மகள் மற்றும் குடும்பத்தார்களின் கனவுகள் அனைத்து பொசுங்கி விட்டது. இந்த செய்தி கேட்டதிலிந்து, என குடும்பத்திலுள்ள அனைவரும் சாப்பிடாமல், துாங்காமல், விரக்தியில் இருந்து வருகின்றோம். பூர்ணிஷா, மனவேதனையில், செய்வதறியாத நிற்கின்றார். தற்போது வரும் ஜூலை மாதம் உலக அளவில் ஸ்கேட்டிங் இன்லைன் ஹாக்கி போட்டி நடைபெறப்போவதாக அறிவித்துள்ளார்கள். அதில் விளையாடி, தற்போது இழந்த பெயரை மீட்டு, இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்றார்.