T-20 WC: ‛கொஞ்ச நஞ்ச ஆட்டமாடா போட்டீங்க...’ ஆஸி., நியூசி.,யை காலி பண்ணி ஸ்காட்லாந்திடம் கண்டமான பங்களா பாய்ஸ்!
டி-20 உலககோப்பையில், ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு அடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்திய மூன்றாவது அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது ஓமன் அணி.
ஐபிஎல் தொடரை அடுத்து, டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பித்துள்ளது. இத்தொடரில் சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்கான தகுதிப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதன்படி, குரூப் பி பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் ஓமனும், பப்புவா நியூ கினியா அணிகளும் நேருக்கு நேர் மோதின. இன்னொரு போட்டியில், ஸ்காட்லாந்து, வங்கதேச அணிகள் மோதின.
ஓமன் vs நியூ பப்புவா கினியா
முதலில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய பப்புவா நியூ கினியா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. பிலால் கான் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலே தொடக்க வீரர் டோனி உரா ரன் ஏதுமின்றி போல்டானார். கலிமுல்லா வீசிய அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் லேகா சியகாவும் போல்டானார். ரன் கணக்கைத் தொடங்கும் முன்னரே இரண்டு விக்கெட்டுகளை இழந்தத பப்புவா நியூ கினியாவை கேப்டன் ஆசாத்வலாவும், சார்லஸ் அமினியும் இணைந்து மீட்டனர். இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்க்கு 129 ரன்கள் எடுத்தது நியூ பப்புவ கினியா அணி.
அடுத்து களமிறங்கிய ஓமன் அணியின் ஓப்பனிங் பேட்டர்கள் அக்யூப் இல்யாஸ், ஜதிந்தர் சிங் ஆகியோரு அதிரடி தொடக்கத்தை தந்தனர். பஞ்சாபில் பிறந்த ஓமனில் செட்டிலான ஜதிந்தர் சிங், மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் 130 ரன்கள் என்ற இலக்கை 13.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து ஓமன் அணி அபார வெற்றி பெற்றது. ஜதிந்தர் சிங் 43 பந்தில் 4 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரியுடனும் 73 ரன்களுடனும், அகிப் இலியாஸ் 43 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது ஓமன் அணி.
டி-20 உலககோப்பையில், ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா அணிகளுக்கு அடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்திய மூன்றாவது அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது ஓமன் அணி.
ஸ்காட்லாந்து vs வங்கதேசம்
டி-20 உலகக்கோப்பையின் முதல் நாள் ஆட்டத்தின் இரண்டாவது போட்டியில் ஸ்காட்லாந்து, வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, போட்டியின் 12 வது ஓவரில் 53/6 என்ற நிலையை எட்டியது. இந்நிலையில், 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிறிஸ் க்ரீவஸ், மார்க் வாட் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த கிரீவ்ஸ், கிரிக்கெட் வட்டாரத்தை கவனிக்க வைத்தார். இதனால், முதல் இன்னிங்ஸின் முடிவிலேயே தோல்வியை உறுதி செய்ய இருந்த ஸ்காட்லாந்து அணியை மீட்டனர் இந்த பேட்டர்கள். 20 ஓவர் வரை தாக்குப்பிடித்த ஸ்காட்லாந்து அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்தது.
Scotland's star man ⭐️
— T20 World Cup (@T20WorldCup) October 17, 2021
An excellent performance with the bat as well as two vital wickets!#T20WorldCup pic.twitter.com/NujVMRsLDF
அடுத்து களமிறங்கிய அனுபவம் வாய்ந்த வங்கதேச அணி, நிச்சயம் போட்டியை வென்றுவிடும் என்றுதான் பலரும் எதிர்ப்பார்த்திருப்பர். ஆனால், நடந்தது வேறு! ஸ்காட்லாந்து பெளலர்கள் தங்களால் முயன்ற வரை வங்கதேச பேட்டர்களுக்கு நெருக்கடி தந்தனர். இதனால், பெரிதாக சோபிக்காமல் சொர்ப்ப ரன்களுக்கு வெளியேறினர் வங்கதேச பேட்டர்கள். ஸ்காட்லாந்து பெளலர்கள் பிராட் வீல் (3), கிறிஸ் கிரீவஸ் (2), மார்க் வாட் (1), ஜோஷ் டேவி (1) ஆகியோர் விக்கெட்டுகள் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 எடுத்த வங்கதேச அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்து தொடர்களை வென்று டி-20 உலகக்கோப்பையில் களமிறங்கிய வங்கதேச அணி, முதல் போட்டியிலேயே சறுக்கி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்