Dhoni, Raina | "தோனி விளையாடாவிட்டால் நானும் விளையாட மாட்டேன்" - சுரேஷ் ரெய்னா
ஐ.பி.எல். தொடரின் அடுத்த சீசனில் தோனி விளையாடாவிட்டால் தானும் விளையாடப்போவதில்லை என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமானவர் மகேந்திர சிங் தோனி. ரசிகர்கள் தோனி மேல் கொண்ட அன்பின் காரணமாக அவரை தல என்று அழைத்து வருகின்றனர். சென்னை அணியில் தோனிக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவர் சுரேஷ் ரெய்னா. தோனி மற்றும் ரெய்னாவின் நட்பு என்பது ரசிகர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. தோனியை தல என்று அழைக்கும் ரசிகர்கள், சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்று அழைக்கிறார்கள்.
கடந்த வாரம் மகேந்திர சிங் தோனி நல்ல உடல்தகுதியில் நீடிக்கிறார் என்றும், இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனியே நீடிப்பார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவிடம் தோனி அடுத்த சீசனில் விளையாடாவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, என்னிடம் கிரிக்கெட் விளையாட இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் உள்ளது. இந்தாண்டு நாங்கள் கோப்பையை வென்று விட்டால், தோனியை அடுத்த சீசனிலும் விளையாட வலியுறுத்துவேன். ஒருவேளை தோனி விளையாட சம்மதிக்காவிட்டால், நானும் விளையாட மாட்டேன் என்றார்.
ஐ.பி.எல். தொடரில் மூன்று முறை சாம்பியனான சென்னை அணியின் தூணாக தோனியும், ரெய்னாவும் விளங்கி வருகின்றனர். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக ஆடி வரும் இவர்கள் நடப்பு ஐ.பி.எல், தொடரிலும் சென்னை அணிக்காக ஆடி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியுடன் விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு நல்ல நட்புறவு உள்ளது. அவர்களில் சுரேஷ் ரெய்னாவை தனது சொந்த சகோதரனைப் போலவே தோனி நடத்தி வருகிறார். கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 40 வயதான மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல். போட்டிகள் தவிர அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த சிறிது நேரத்தில், சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
34 வயதான ரெய்னா தனது ஓய்வை அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், தோனி – சுரேஷ் ரெய்னா நட்பை கண்டு பலரும் நெகிழ்ச்சி அடைந்தனர். தற்போது தோனி ஐ.பி.எல். விளையாடவிட்டால் தானும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று சுரேஷ் ரெய்னா கூறியிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
34 வயதான சுரேஷ் ரெய்னா 2008ம் ஆண்டு முதல் 200 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5 ஆயிரத்து 491 ரன்களை குவித்துள்ளார். இதில் 29 முறை அவுட்டாகாமல் இறுதிவரை களத்தில் நின்றுள்ளார். 39 முறை அரைசதம் அடித்துள்ள சுரேஷ் ரெய்னா 1 சதம் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ரன்னாக 100 ரன்களை பதிவு செய்துள்ளார்.