Paralympics 2020: இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி ஐஏஎஸ் அதிகாரியின் ஒலிம்பிக் கனவு!
கர்நாடகவைச் சேர்ந்த சுஹஸ், இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி ஐஏஎஸ் அதிகாரி. இப்போது பாரலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்
டோக்கியோ ஒலிம்பிக் தொடரை அடுத்து, இன்று முதல் பாராலிம்பிக் தொடர் ஆரம்பமாகிறது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார். பாரா பேட்மிண்டன் போட்டியில் விளையாட இருக்கும் அந்த சாதனையாளர் யார்?
இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று அசத்தினர். பாரலிம்பிக்கில், இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளைச் சேர்ந்த 54 வீரர் வீராங்கனைகள் டோக்கியோ பாராலிம்லிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில், பாரா பேட்மிண்டன் விளையாட்டில் 3 வீரர்கள், 2 வீராங்கனைகள் என மொத்தம் ஐந்து பேர் பங்கேற்க உள்ளனர்.
கர்நாடகவைச் சேர்ந்த சுஹஸ், இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி ஐஏஎஸ் அதிகாரி. இப்போது பாரலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். படிப்பு, வேலை என எதுவாக இருந்தாலும் தனது முழு திறமையை வெளிப்படுத்தும் சுஹஸ், பொறியியல் பட்டப்படிப்பில் தலைச்சிறந்த மாணவராக பெயர் பெற்றார். அதனை தொடர்ந்து, இந்தியாவின் முதல் மாற்றுத்திறனாளி ஐஏஎஸ் அதிகாரியாக தடம் பதித்தார்.
2007-ம் ஆண்டு ஆக்ராவில் இருந்து தனது பொதுப்பணியை தொடங்கிய அவர், இன்னொரு பக்கம் பேட்மிண்டன் விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். வெறும், பகுதி நேர வீளையாட்டு வீரராக மட்டும் இல்லாமல், பேட்மிண்டன் விளையாட்டையும் சீரியஸாக எடுத்துக் கொண்டார் சுஹஸ். விளைவு, 2016-ம் ஆண்டு சர்வதேச பாரா பேட்மிணடன் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட ஆரம்பித்தார். சர்வதேச விளையாட்டில், இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் பொதுப்பணி துறை அதிகாரியானார்.
இப்படி, சுஹஸின் பயணத்தில் நிறைய ‘முதல்’கள் இருந்தன. மாற்றுத்திறனாளி சாதனையாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, நம்பிக்கையாக தடம் பதித்து வருகின்றார். ஆசிய பாரா பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்றதை அடுத்து, சர்வதேச ஃபோடியம்களில் சுஹஸ் ஏறினார். பாரா பேட்மிண்டன் உலக தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அவர், பாராலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முனைப்பில் டோக்கியோ சென்றுள்ளார். சுஹஸ் பங்கேற்க இருக்கும் பாரா பேட்மிண்டன் போட்டிகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.
38 வயதான சுஹஸ், உத்தர பிரதேசத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக உள்ளார். கொரோனா சூழலில், தன்னை துடிப்பாக வைத்திருந்தது பேட்மிண்டன் விளையாட்டுதான் என தெரிவித்துள்ளார். விளையாட்டின் மீது, குறிப்பாக பாரா விளையாட்டின் மீது மிகுந்து ஆர்வம் கொண்டிருக்கும் இவர், பொது மக்களிடத்திலும் பாரா விளையாட்டுகளை குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார். தன்னால் முடிந்த வசதிகளையும் ஏற்படுத்தி கொண்டு வருகிறார். பொதுவாக, விளையாட்டு என்றால் தங்களது குழந்தைகளை உற்சாகப்படுத்த தயங்குவர் பெற்றோர். அதிலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் விருப்பப்படும் விளையாட்டுகளில் அவர்களை உத்வேகப்படுத்துவது வெகு சிலரே. இந்த நிலை மாற வேண்டும், மாறும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் சுஹஸ்.
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும், தன்னுடைய நம்பிக்கையை மீட்டெடுத்து உற்சாகப்படுத்துவது விளையாட்டுதான் என நம்புகிறார் சுஹஸ். விளையாட்டு - உத்வேகம் தரும், சாதிக்க தூண்டும்! இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்துகள் சுஹஸ்!
Tokyo Paralympics: உடல் குறையல்ல மெடல் தான் இலக்கு... இந்திய பாராலிம்பிக் படை ரெடி!