Sourav Ganguly | 'கிங் ஆஃப் கம்பேக்' தாதா கங்குலியின் 'வாத்தி கம்மிங்' சம்பவங்கள் !
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இவரை ரசிகர்கள் தாதா என்று செல்லமாக அழைப்பார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐயின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் கங்குலி கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த சில சிறந்த சம்பவங்கள் என்னென்ன?பார்க்கலாம்.
1998 நிதாஸ் டிராபி இறுதிப் போட்டி:
1990-களின் பிற்பாதியில் இந்திய கிரிக்கெட் அணி மேட்ச் ஃபிக்சிங் என்ற பெரிய பிரச்னையை சந்தித்தது. அப்போது இலங்கை எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று போட்டிக்கு முன்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் போட்டிக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலிக்கு தெரியவந்தது. அந்த சமயத்தில் இருவரும் தங்களால் முடிந்த வரை நீண்ட நேரம் பேட்டிங் ஆட வேண்டும் என்று நினைத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 252 ரன்கள் சேர்த்தனர். அத்துடன் இவர்கள் இருவரும் 44 ஓவர்கள் வரை விளையாடினர். இதனால் மற்ற வீரர்களுக்கு வெறும் 6 ஓவர்கள் மட்டுமே கிடைத்தது. இறுதியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. சச்சின் 128 ரன்களும் கங்குலி 109 ரன்களும் விளாசி இருப்பார்கள்.
உலகக் கோப்பையில் 183:
1999-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு சிறப்பாக அமையவில்லை. முதல் இரு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்திய அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை எதிராக களமிறங்கியது. சமிந்தா வாஸ் மற்றும் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சை சவுரவ் கங்குலி மற்றும் டிராவிட் வெளுத்து வாங்கினர். இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 318 ரன்கள் சேர்த்தனர். சவுரவ் கங்குலி 183 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். தற்போது வரை உலக கோப்பை வரலாற்றில் இந்தியா சார்பில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.
2000 கேப்டனான உடன் புதிய வீரர்களை களமிறக்கியது:
இந்திய கிரிக்கெட் அணியில் 1980கள் முதல் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே அதிகளவில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். 2000ஆம் ஆண்டு கேப்டன் பதவியை பெற்றவுடன் கங்குலி அதை உடைத்து எரிந்தார். சேவாக், ஹர்பஜன் சிங், தோனி, யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்ட பல வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தார். அத்துடன் அவர்களுக்கு நம்பிக்கையும் அளித்தார். அவர்களுக்கு எப்போதும் துணையாக நின்றார்.
நீண்ட ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில் டெஸ்ட் வெற்றி:
இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டி வெல்ல தொடங்கி வைத்தவர் சவுரவ் கங்குலிதான். ஏனென்றால் அது வரை வெளிநாட்டு தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வந்தது. அந்தச் சூழலில் 2002ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது. அதன்பின்னர் அதே ஆண்டில் இங்கிலாந்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்றது. 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் போட்டியில் வெற்றி பெற்றது. 2004ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்தது.
கிங் ஆஃப் கம்பேக்:
2004 ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியை பல வெற்றிகளுக்கு அழைத்து சென்ற கங்குலிக்கு 2005ஆம் ஆண்டு பெரிய ஏமாற்றத்தை தந்தது. அந்த ஆண்டில் இவருடைய பேட்டிங் ஃபார்ம் சற்று மோசமாக தொடங்கியது. அப்போது பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலுக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இதன் காரணமாக கங்குலி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அத்துடன் இவரை அணியில் இருந்து நீக்கினர். அந்த சமயத்தில் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் முடிந்தது. இனி அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது என்ற பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் தன்னுடைய மட்டையால் பதிலளித்தார். முடியாததை முடித்து காட்டுவதே கங்குலியின் போரட்ட குணம். அந்த குணத்தை வைத்து தீவிரமாக பயிற்சி செய்தார். உள்ளூர் போட்டிகளில் களமிறங்கி சதம் விளாசி மீண்டும் தன்னுக்குள் இருந்த கிரிக்கெட் பசியை வெளிப்படுத்தினார்.
2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கங்குலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் 2 அரைசதம் உட்பட 214 ரன்கள் விளாசினார். இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்த வீரர் கங்குலி தான். அதன்பின்னர் 2008ஆம் ஆண்டு தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டி வரை கங்குலி சிறப்பான ஃபார்மில் இருந்தார். அவருடைய ஃபார்மை பார்த்த சச்சின் டெண்டுல்கர், “இவ்வளவு சிறப்பாக கங்குலி விளையாடி நான் பார்த்தே இல்லை” எனக் கூறினார். ஒரு வீரர் தன்னுடைய ஃபார்மை இழந்த போது ஓய்வை அறிவிப்பார். ஆனால் கங்குலி தன்னுடைய உச்சமான ஃபார்மில் இருக்கும்போது 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
கங்குலி 16 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ளார். அவற்றில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணி தோற்கவில்லை. இதில் இந்திய அணி 12 டிரா மற்றும் 4 வெற்றி பெற்றுள்ளது. மேலும் கங்குலியின் டெஸ்ட் கிரிக்கெட் சராசரி அறிமுகம் முதல் ஓய்வு வரை 40க்கு கீழே சென்றதே இல்லை. இப்படிப்பட்ட வீரராக இருந்த கங்குலி தற்போது நிர்வாகியாக மாறி பிசிசிஐயின் தலைவராக இருந்து வருகிறார்.
மேலும் படிக்க: ராயல் பெங்கால் டைகர் தாதாவின் சூப்பர் தருணங்கள்- ஹேப்பி பர்த்டே கங்குலி..!