Tamil Thalaivas:எங்கள மன்னிச்சுடுங்க... கண்டிப்பா அது நடக்கும்... நம்பிக்கை அளிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்!
கடந்த போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தாலும் இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்று தமிழ் தலைவாஸ் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
புரோ கபடி லீக்:
10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
முன்னதாக, தமிழ் தலைவாஸ் அணி வீரர்களிடம் நமது ABP நாடு சார்பில் நேர்காணல் எடுக்கப்பட்டது. அதில் அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை கீழே பார்ப்போம்:
எங்களோட பலம்:
தமிழ் தலைவாஸ் அணியின் பாசிட்டிவாக எதை நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அணியின் ஒருங்கிணைப்பு, வீரர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இருப்பது, அணியின் பயிற்சியாளர் தொடர்ந்து உற்சாகப்படுத்துவது அதோடு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அணி நிர்வாகமும் உற்சாகப்படுத்தும். இது போன்ற செயல்பாடுகள் தான் எங்கள் அணியின் பாசிட்டிவ்.” என்றவர்களிடம், தமிழ்நாட்டின் பேமஷான உணவுகளை அணியில் விளையாடும் வட இந்திய வீரர்களுக்கு சாப்பிட சொல்லி கூறியதுண்டா என்ற கேள்விக்கு உற்சாகமாக பதிலளித்த தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள், “ வட இந்திய வீரர்களில் இங்கே தென்னிந்தியாவிற்கு வந்த பின்பு தான் இட்லியே சாப்பிட ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்னதாக இட்லியே சாப்பிட்டதில்லை என்று கூறுவார்கள்”என்றனர்.
அப்போது தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடும் வட இந்திய வீரர் ஹிமன்சு பேசுகையில், “முதல் தடவையாக கன்னியாகுமரியில் தான் இட்லி, தோசை, சாம்பார் போன்றவற்றை சாப்பிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த உணவு இட்லி, தோசை தான்” என்றார்.
துருதுரு வீரர்:
அணியிலேயே மிகவும் நகைச்சுவை தன்மை கொண்ட வீரர் யார் என்ற கேள்விக்கு, “எங்கள் அணி வீரர் அஜங்க்யா தான் எப்போதும் துருதுருவென இருப்பார். அவரைப்பார்த்தால் நாங்கள் சிரித்து கொண்டே இருப்போம்.” என்றனர்.
அதேபோல், இந்த சீசனில் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன என்ற கேள்வியை ABP நாடு சார்பில் எழுப்பினோம். அதற்கு, ”முதலில் நாங்கள் தமிழ் தலைவாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சென்னையில் நடந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததற்கு மன்னித்து விடுங்கள். இனி வரும் போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றில் விளையாடுவோம்” என்றனர் உற்சாகத்துடன். இனி வரும் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற ABP நாடு சார்பாக நாமும் வாழ்த்துவோம்.