Chess Olympiad 2022: பாகிஸ்தான் விலகியது எதிர்பாராத ஒன்று.. பாகிஸ்தானை நோக்கி கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர்..!
தமிழக அரசு சார்பில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் மெய்யநாதன் மற்றும் ஏவா வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று வெகு விமரிசையாக தொடங்கியது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் காய்களை நகர்த்தி தொடங்கி வைத்தார். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடனிருந்தார். இதேபோல தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
இன்று நடைபெறும் போட்டியில் மொத்தம் 1392 விளையாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர். பொதுப்பிரிவில் 744 வீரர்களும் பெண்கள் பிரிவில் 648 வீரர்களும் விளையாடுகின்றனர். இந்தியா சார்பில் 30 வீரர்கள் விளையாட்டில் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் இது மூன்று அணிகள் களம் இழக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஏ பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி உட்பட 12 வீரர்கள் இன்று விளையாட உள்ளனர். இளம் கிராண்ட் மாஸ்டர் ஆன பிரக்ஞானந்தாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில், தமிழக அரசு செஸ் ஒலிம்பியாட் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அணி வீரர்கள் கடைசி நேரத்தில் விலகியிருப்பது எதிர்பாராத ஒன்று, அதற்கு அவர்கள் கூறியிருக்கும் காரணம் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியா ஒலிம்பியாட் சுடரைக் கொண்டு சென்றது என கூறுகிறார்கள் இது சரியல்ல. இந்தியாவிற்கு சொந்தமான இடத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியில்தான் இது நடந்தது. இதேபோல பாகிஸ்தான் அனைத்து விளையாட்டுகளையும், கிரிக்கெட் காமன்வெல்த் உள்ளிட்ட போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்குமா என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, மாமல்லபுரத்தில் 188 நாடுகள் கலந்துகொள்ளும் 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டில் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாடு சிறப்பான கலாச்சாரம், சிறப்பான அறிஞர்கள் மற்றும் உலகத்தின் பழமையான மொழியை கொண்டுள்ளது. தமிழ்நாட்டிற்கும் செஸ் விளையாட்டிற்கும் பந்தம் உள்ளது. அதன்காரணமாக இந்தியாவின் செஸ் பவர் ஹவுஸாக தமிழ்நாடு விளங்கி வருகிறது" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று என்றும், 4 மாதங்களில் இந்த ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம் என்றும் கூறினார். மேலும் இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்