LA Olympics: ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - 128 வருட காத்திருப்பு, பொமோனா தெரியுமா? போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும்?
LA 2028 Olympics Cricket: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LA 2028 Olympics Cricket: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன.
ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்:
ஒலிம்பிக், விளையாட்டு போட்டிகளின் உச்சபட்ச நிகழ்வாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் அதை மேலும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 128 வருட இடைவெளிக்குப் பிறகு கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் இடம்பெற உள்ளது. 1900 ஆம் ஆண்டு ஒரே முறையாக நடத்தப்பட்ட பிறகு, 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுகிறது. இந்த எடிஷனில் சேர்க்கப்பட்டுள்ள ஐந்து புதிய விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். அதுவும் கிரிக்கெட்டிற்கு இடைக்கால அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
போட்டிகள் எங்கு, எப்போது நடைபெறும்?
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என்ற அறிவிப்பே ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, எந்த மைதானத்தில் போட்டி நடைபெறும், எப்போது நடைபெறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தான், ”கலிபோர்னியாவின் கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள போமோனா நகரில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். போமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்டில் தற்காலிகமாக கட்டப்பட்ட மைதானத்தில் போட்டிகள் நடைபெறும்” என்று லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்ஸ் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. ஜூலை 14 முதல் 30 வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இருந்து தலா ஆறு அணிகள் பங்கேற்கும்.
போமோனா எங்கே இருக்கிறது?
குறிப்பாக, போமோனா என்பது அமெரிக்காவின் கலிபோர்னியாவின் கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள ஒரு நகரமாகும். இது போமோனா பள்ளத்தாக்கில் இன்லேண்ட் எம்பையருக்கும், சான் கேப்ரியல் பள்ளத்தாக்கிற்கும் இடையில் அமைந்துள்ளது. 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 1,51,713 மட்டுமே ஆகும்.
நகரத்தின் வானிலையைப் பற்றிப் பேசுகையில், போமோனா ஒரு மத்திய தரைக்கடல் காலநிலையைக் கொண்டுள்ளது. கோடை காலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும், அதே நேரத்தில் குளிர்காலம் லேசானதாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். ஆண்டு முழுவதும் அதிக அளவு சூரிய ஒளி இருக்கும். கோடை காலம் பொதுவாக வெயிலாக இருக்கும், ஜூன் முதல் செப்டம்பர் வரை மிகக் குறைந்த மழைப்பொழிவு மட்டுமே இருக்கும்.
கிரிக்கெட்டை பரப்பும் நடவடிக்கை:
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது, உலகின் மற்ற பகுதிகளுக்கும் கிரிக்கெட்டைப் பரப்புவதில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கும். 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகளுடன் இணைந்து நடத்தியது. அமெரிக்காவில் இவ்வளவு பெரிய சர்வதேச மட்டத்தில் கிரிக்கெட் விளையாடப்படுவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
ஐசிசி சொல்வது என்ன?
பொமோனாவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா வரவேற்றார். அதன்படி, "2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம், ஏனெனில் இது நமது விளையாட்டு ஒலிம்பிக்கில் மீண்டும் வருவதற்கான நடவடிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு என்றாலும், புதிய பார்வையாளர்களை ஈர்க்கும் வேகமான, உற்சாகமான டி20 வடிவத்தில் ஒலிம்பிக்கில் இடம்பெறும்போது பாரம்பரிய எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு அருமையான வாய்ப்பாக இது இருக்கும்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.