India Wins Bronze: வெண்கலம் வென்ற அவானி.. ஒரே பாராலிம்பிக் தொடரில் 2 பதக்கம் வென்று அசத்தல்!
Tokyo Paralympics 2020 Shooting: டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன் பிரிவு துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் அவானி லெகாரா பங்கேற்றார்.
டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. முதலில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அவானி லெகாரா(Avani Lekhara) தங்கப்பதக்கம் வென்றார். அதன்பின்னர் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் சிங்கராஜ் வெண்கலப் பதக்கத்தை வென்று இருந்தார். இந்தச் சூழலில் இன்று மகளிர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன் துப்பாக்கிச் சுடுதல் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா தகுதிச் சுற்றில் இரண்டாவது இடம்பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் முதலில் நீலிங் முறையில் துப்பாக்கி சுடுதல் நடத்தப்பட்டது. அதில் அவானி லெகாரா 149.5 புள்ளிகள் பெற்றார். நீலிங் பிரிவின் முடிவில் அவானி லெகாரா 4ஆவது இடத்தில் இருந்தார். அதன்பின்னர் ப்ரோன் முறையில் அவானி லெகாரா 51.4,51.4, 51.0 புள்ளிகளுடன் இரண்டு பிரிவிலும் சேர்த்து மொத்தமாக 303.4 புள்ளிகள் பெற்றார். அந்தச் சுற்றின் முடிவில் அவானி லெகாரா 6ஆவது இடத்தில் இருந்தார். இறுதியாக ஸ்டான்டிங் முறையில் துப்பாக்கிச்சுடுதல் நடைபெற்றது. இந்த முறையில் சுடும் போது ஒவ்வொரு சிரீஸ் முடிந்த பிறகும் ஒருவர் வெளியேற்ற படுவார்கள். இதனால் இந்த சுற்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
#Tokyo2020 #Paralympics #Shooting #Bronze for @AvaniLekhara 🔥
— Sports For All (@sfanow) September 3, 2021
What an inspiration she’s been! 😢🇮🇳
The 19 year old #IND has finished in 3rd POSITION with a score of 445.9, bagging her 2nd medal in Tokyo! 😍#Praise4Para #Cheer4India #AbJeetegaIndia #SheIsGold
இதில் முதல் 5 ஷாட்களின் முடிவில் அவானி 50.5 புள்ளிகள் பெற்றார். அத்துடன் மொத்தமாக 353.9 புள்ளிகள் 5ஆவது இடத்திற்கு முன்னேறினார்.அதன்பின்னர் இரண்டாவது சீரிஸில் 50.8 புள்ளிகளுடன் 404.7 புள்ளிகள் பெற்று 4ஆம் இடத்திற்கு முன்னேறினார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஷாட்டிற்கும் பிறகு ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்பதால் மிகவும் விறுவிறுப்பான கட்டத்திற்கு போட்டி சென்றது. இறுதியில் அவானி லெகாரா 445.9 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பிடித்தார். அத்துடன் வெண்கலப்பதக்கத்தை வென்றார். ஒரே பாராலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேலும் ஜோகிந்தர் சிங் பேடிக்கு பிறகு ஒரே பாராலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களுக்கு மேல் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். 1984ஆம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் ஜோகிந்தர் சிங் பேடி ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் வென்று இருந்தார்.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இந்தியாவின் தீபக் பங்கேற்றார். அதில் நீலிங் பிரிவில் அவர் 372 புள்ளிகள் பெற்றார். அதன்பின்னர் ப்ரோன் முறையில் அவர் 383 புள்ளிகள் பெற்றார். இறுதியாக ஸ்டான்டிங் பிரிவில் அவர் 359 புள்ளிகள் பெற்றார். எனவே மூன்று பிரிவுகளிலும் மொத்தமாக 1114 புள்ளிகள் பெற்றார். அத்துடன் தகுதிச் சுற்றில் 18ஆவது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.
மேலும் படிக்க: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பதக்கம். வெள்ளி வென்ற 18 வயது இளைஞர்!