Krishna Nagar Profile: உயரமா தடை? உயர்ந்தார் கிருஷ்ணா நாகர்.. பாரா பேட்மிண்டனில் தங்கம் வென்ற பெருமைக்கதை.!
Krishna Nagar Wins Gold: டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் எஸ்.ஹெச் 6 பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர்(Krishna Nagar) தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அத்துடன் டோக்கியோ பாரா பேட்மிண்டனில் இந்தியாவிற்கு நான்காவது பதக்கத்தை பெற்று தந்துள்ளார். இந்தச் சூழலில் யார் இந்த கிருஷ்ணா நாகர்? எப்படி பாரா பேட்மிண்டன் போட்டிக்குள் நுழைந்தார்?
ராஜஸ்தான் மாநிலத்தில் 1999ஆம் ஆண்டு பிறந்தவர் கிருஷ்ணா நாகர். இவருக்கு 2 வயதாக இருந்தப் போது உயரம் குறைபாடு இவருக்கு உள்ளது கண்டறியப்பட்டது. இதை அறிந்துவுடன் அவர் முடங்கி இருக்காமல் மற்றவர்களை போல் இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். மேலும் சாதிக்க உயரம் ஒரு தடையாக இருக்காது என்ற கருத்தில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார். இதற்காக விளையாட்டு துறையை அவர் தேர்ந்தெடுத்தார். 14 வயது முதல் பேட்மிண்டன் விளையாட்டில் தீவிர பயிற்சியை மேற்கொண்டார்.
2016ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். குறிப்பாக சர்வதேச போட்டிகளுக்கு முன்பாக இரண்டு முறை தேசிய பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று கிருஷ்ணா நகர் அசத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா போட்டிகளில் பேட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அனைவரையும் அசர வைத்தார். 2020ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்று அசத்தினார். இந்தாண்டு டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக நடைபெற்ற துபாய் பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று நல்ல ஃபார்மில் இருந்தார்.
முதல் முறையாக பாராலிம்பிக் வரலாற்றில் டோக்கியோ பாராலிம்பிக் சேர்க்கப்பட்டுள்ளதால் அதில் சாதிக்க வேண்டும் என்று துடிப்புடன் கிருஷ்ணா நாகர் இருந்தார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டார். தன்னுடைய நல்ல ஃபார்மை அவர் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளிலும் காட்டினார். இதன்விளைவாக இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தினார். இறுதி போட்டியில் ஹாங்காங் வீரரை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவிற்கு பாரா பேட்மிண்டனில் இரண்டாவது தங்கத்தை வென்று தந்துள்ளார். அத்துடன் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு இது ஐந்தாவது தங்கப்பதக்கமாகும். முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரா பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியா இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஐஏஎஸ் டூ பாராலிம்பிக் வெள்ளி: சுஹேஷ் யேத்திராஜின் நம்பிக்கை பயணம் !