Tokyo Olympics: ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் தோல்வியுடன் வெளியேறிய சாய் பிரணீத் !
இரண்டாவது தொடக்கத்தில் சாய் பிரணீத் சற்று புள்ளிகள் எடுத்தார். எனினும் நெதர்லாந்து வீரர் கெலிஜோவ் சிறப்பாக மீண்டும் முன்னிலை பெற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் குரூப் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் தன்னுடைய முதல் குரூப் போட்டியில் இஸ்ரேல் வீரர் ஸில்பர்மேன் இடம் 21-17,21-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் இன்று அவர் தனது இரண்டாவது குரூப் போட்டியில் நெதர்லாந்து வீரர் கெலிஜோவை எதிர்கொண்டார்.
அந்தப் போட்டியில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர் ஆதிக்கம் செலுத்தி வந்தார். முதல் கேமை 21-14 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இரண்டாவது கேமின் தொடக்கத்தில் சாய் பிரணீத் சற்று புள்ளிகளை எடுத்தார். இதனால் மீண்டும் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் நெதர்லாந்து வீரர் கெலிஜோவ் சிறப்பாக மீண்டும் முன்னிலை பெற்றார். இறுதியில் இந்த கேமையும் 21-14 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 21-14,21-14 என்று சாய் பிரணீத்தை வீழ்த்தினார்.
It's curtains for @saiprneeth92 at #Tokyo2020! 🏸
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 28, 2021
Despite a valiant effort, the #IND shuttler went down 14-21, 14-21 to #NED's Mark Caljouw, finishing last in Group D of #Badminton men's singles! #Olympics | #StrongerTogether | #UnitedByEmotion
குரூப் பிரிவில் ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த சாய் பிரணீத் இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். குரூப் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். இதனால் சாய் பிரணீத் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்தும் வெளியேறினார்.
முன்னதாக இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் குரூப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஹாங்காங் வீராங்கனை செங்கை எதிர்த்து இன்று விளையாடினார். இதில் முதல் கேமை 13 நிமிடங்களில் பி.வி.சிந்து 21-9 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமையும் பி.வி.சிந்து 21-16 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் குரூப் போட்டியில் இரண்டு வெற்றிகளை பெற்று பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் குரூப் பிரிவில் சத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி-சிராக் செட்டி 21-17,21-19 என்ற கணக்கில் பிரிட்டன் ஜோடியை வென்றது. எனினும் இந்த குரூபில் இந்திய வீரர்கள் 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் மூன்றாம் இடத்தை பிடித்தனர். ஒவ்வொரு குரூபிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சத்விக் சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி குரூப் போட்டிகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது.
மேலும் படிக்க: மகளிர் தனிநபர் பிரிவு வில்வித்தை : இரண்டாவது சுற்றில் தீபிகா குமாரி வெற்றி !