Tokyo Olympics: மகளிர் தனிநபர் பிரிவு வில்வித்தை : இரண்டாவது சுற்றில் தீபிகா குமாரி வெற்றி !
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டிகளில் தனி நபர் ரிகர்வ் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி முதல் சுற்றில் பூட்டான் நாட்டின் கர்மாவை 6-0 என வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிஃபரை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் செட்டில் ஜெனிஃபர் 26-25 என்ற கணக்கில் வென்றார். அதன்மூலம் 2-0 என முன்னிலை பெற்றார்.
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டில் சிறப்பாக செயல்பட்ட தீபிகா குமாரி இரண்டு முறை 10 புள்ளிகளை பெற்றார். அத்துடன் அந்தச் செட்டை 28-25 என்ற கணக்கில் வென்றார். இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர். மூன்றாவது செட்டை 27-25 என்ற கணக்கில் தீபிகா குமாரி வென்று 4-2 என முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற நான்காவது செட்டை அமெரிக்க வீராங்கனை ஜெனிஃபர் 25-24 என்ற கணக்கில் வென்றார். இதனால் இருவரும் 4-4 என்ற கணக்கில் சமமாக இருந்தனர். போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது செட்டில் சிறப்பாக செயல்பட்ட தீபிகா குமாரி 26-25 என்ற கணக்கில் வென்றார். இதனால் 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி முன்னேறியுள்ளார்.
News Flash: #Archery : Deepika Kumari moves into Pre-QF with hard-fought 6-4 win over lowly ranked American archer. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/U9RSzF2X0p
— India_AllSports (@India_AllSports) July 28, 2021
முன்னதாக இந்தியா சார்பில் தருண்தீப் ராய் முதல் சுற்றில் உக்ரைன் வீரரை வென்றார். இரண்டாவது சுற்றில் அவர் இஸ்ரேல் வீரரிடம் ஷூட் ஆஃப் முறையில் தோல்வி அடைந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆடவர் தனி நபர் பிரிவில் பிரவீன் ஜாதவ் முதல் சுற்றில் ரஷ்ய வீரர் 6-0 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது சுற்றில் பிரவீன் ஜாதவ் உலகின் நம்பர் ஒன் வீரரான அமெரிக்காவின் ப்ராடியிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆடவர் தனிநபர் பிரிவில் அடானு தாஸ் மட்டும் நாளை முதல் சுற்றில் களமிறங்க உள்ளார். அவர் முதல் சுற்றில் நாளை சீன தைபேயின் செங்கை எதிர்த்து நாளை காலை 7.40 மணிக்கு விளையாட உள்ளார். ஏற்கெனவே ஆடவர் குழு பிரிவில் இந்திய அணி காலிறுதியில் தென்கொரியா அணியிடம் 6-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதன்பின்னர் கலப்பு பிரிவில் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் காலிறுதியில் தென்கொரியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்கள். டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவிற்கு தொடர்ந்து தோல்விகளாகவே அமைந்து வருகிறது. இதுவரை வில்வித்தையில் இந்திய அணி பதக்கம் எதுவும் வெல்லைவில்லை.
மேலும் படிக்க: மகளிர் குத்துச்சண்டையில், பூஜா ராணி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தல் !