Olympics | மனதை உருக்கிய ஒலிம்பிக் தருணங்கள்- பதக்கத்தை நூல் இழையில் தவறவிட்ட இந்தியர்கள் !
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
விளையாட்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. முதல் நாளான இன்று வில்வித்தை விளையாட்டின் தகுதிச் சுற்றுகள் நடைபெறுகின்றன. அதன்பின்னர் மாலை 4.30 மணியளவில் கோலகலமான துவக்க விழா நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் ஆடவர் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிற்கு நடந்த மனதை உருக்கும் தருணங்கள் என்னென்ன? நுழிலையில் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பை தவறவிட்டவர்கள் யார்? யார்?
1. மில்கா சிங்:
1960ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் இறுதிப் போட்டிக்கு மில்கா சிங் தகுதிப் பெற்று இருந்தார். அதில் சிறப்பாக ஓடிய மில்கா சிங் மிகவும் குறைவான இடைவெளியில் நான்காவதாக வந்தார். அதன்மூலம் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை 1/1000 விநாடிகளில் இழந்தார். எனினும் ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
2. பி.டி.உஷா:
இந்தியாவின் பயோலி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்ட தடகள மங்கை பி.டி.உஷா. இவர் 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்றார். அதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பி.டி.உஷா சிறப்பான ஓட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் இறுதியில் 1/100 விநாடிகளில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டு நான்காவது இடத்தை பிடித்தார். மில்கா சிங்கிற்கு பிறகு மீண்டும் தடகளத்தில் நுழிலையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பி.டி.உஷா தவறவிட்டார். எனினும் தன்னுடைய ஓட்டத்தின் மூலம் அவர் மில்கா சிங்கை போல் பலரையும் தடகள விளையாட்டிற்கு அழைத்து வந்தார்.
3. லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி:
'இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'லி-ஹேஷ்' என்று இந்திய டென்னிஸ் உலகில் அழைக்கப்படும் மிகவும் சிறந்த இரட்டையர் ஜோடி லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடி. இந்தியாவின் நம்பர் டென்னிஸ் இரட்டையர் இணை என்றால் அது இவர்கள் இருவர் தான். 2004ஆம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்த இணை பங்கேற்றது. அதில் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆண்டி ரோடிக் இணையை இவர்கள் வீழ்த்தினர். அதேபோல் இரண்டாவது சுற்றில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் இணையை வீழ்த்தினர். இப்படி வரிசையாக பல முன்னணி ஜோடிகளை வீழ்த்தி அசத்தினர்.
அரையிறுதியில் ஜெர்மனி இணையிடம் தோல்வி அடைந்து இவர்கள் வெண்கலப்பதக்க போட்டியில் பங்கேற்றனர். அதில், குரோஷியா நாட்டைச் சேர்ந்த இவான் லுபிஜின் இணையை பயஸ்-பூபதி ஜோடி எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் 7-6,4-6,14-16 என்ற கணக்கில் பயஸ் ஜோடி போராடி தோல்வி அடைந்தது. இதன்மூலம் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்த ஜோடி தவறவிட்டது. 7 முறை ஒலிம்பிக் சென்ற ஒரே இந்திய வீரர் லியாண்டர் பயஸ்தான். அவர் 1996ஆம் ஆண்டு ஒற்றையர் பிரிவில் ஒரு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
4. ஜோய்தீப் கர்மார்கர்:
2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்ற பிறகு இந்தியாவிற்கு துப்பாக்கிச் சுடுதல் பெரிய பதக்க வாய்ப்பாக அமைந்தது. அந்தவகையில் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ஜோய்தீப் கர்மார்கர் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக கர்மார்கர் சுட ஆரம்பித்தார். இறுதியில் 699.1 புள்ளிகள் பெற்று 1.9 புள்ளிகள் வித்தியாசத்தில் இவர் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டார்.
5. தீபா கர்மார்கர்:
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கு முதல் முறையாக இந்தியாவின் தீபா கர்மார்கர் தகுதிப் பெற்று இருந்தார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வெல்லும் வாய்ப்பை மிகவும் குறைவான வித்தியாசத்தில் இவர் தவறவிட்டார். தீபா கர்மார்கர் 15.066 புள்ளிகள் எடுத்து நான்கவது இடத்தை பிடித்தார். வெண்கலப்பதக்கத்தை வெறும் 0.150 புள்ளிகள் வித்தியாசத்தில் தீபா கர்மார்கர் இழந்தது பெரும் சோகமாக அமைந்தது.
6. சானியா மிர்சா-ரோகன் போபண்ணா:
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா சார்பில் சானியா மிர்சா-ரோகன் போபண்ணா ஜோடி களமிறங்கியது. முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு இந்த இணை முன்னேறியது. அதில் தோல்வி அடைந்ததால் வெண்கலப்பதக்க போட்டியில் சானியா-போபண்ணா ஜோடி செக் குடியரசு இணையை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் மோசமாக விளையாடிய இந்திய இணை 1-6,6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது. இதன்மூலம் வெண்கலப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்த இணை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 40 ஆண்டுகளில் முதல்முறை.. ஒலிம்பிக்கில் பங்கேற்காத கேரள தடகள வீராங்கனைகள்..!