Tokyo Olympics | 40 ஆண்டுகளில் முதல்முறை.. ஒலிம்பிக்கில் பங்கேற்காத கேரள தடகள வீராங்கனைகள்..!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இம்முறை கேரளாவைச் சேர்ந்த தடகள வீராங்கனைகள் யாருமே பங்கேற்கவில்லை.
இந்திய தடகள உலகில் பல முக்கியமான தடகள வீராங்கனைகளை உருவாக்கிய மாநிலம் என்றால் அது கேரளாதான். 1980-ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக கேரளாவைச் சேர்ந்த தடகள ஜாம்பவான் வீராங்கனை பி.டி.உஷா பங்கேற்றார். அப்போது முதல் கேரள பெண்களிடையே அவர் விளையாட்டை ஒரு முக்கியமான கருவியாக காட்டினார். அதன்பின்னர் மீண்டும் 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மிகவும் குறைவான நேரத்தில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். இது மேலும் கேரள பெண்களை விளையாட்டிற்கு வரத்தூண்டியது.
அவருக்கு பிறகு இந்திய தடகள உலகில் மேலும் பல முக்கியமான வீராங்கனைகளான ஷைனி வில்சன், அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் வரத் தொடங்கினர். 1980ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 2016-ஆம் ஆண்டு வரை கேரளாவைச் சேர்ந்த வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த டின்டூ லுக்கா, ஜிஸ்னா மேத்யூ, அனில்டா தாமஸ், ஓ.பி.ஜெய்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆனால் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கேரளாவை சேர்ந்த தடகள வீராங்கனைகள் யாரும் தகுதி பெறவில்லை. இம்முறை பிடி உஷா பயிற்சி அளித்து வரும் ஜிஸ்னா மேத்யூ, வி.கே.விஸ்மயா, பி.யூ.சித்ரா ஆகிய மூவரும் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜிஸ்னா மேத்யூ மற்றும் வி.கே.விஸ்மயா காயம் காரணமாக டோக்கியோ போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை நழுவவிட்டனர். அதேபோல் பி.யூ.சித்ராவும் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தார். இதுவரை ஒலிம்பிக் தடகள வரலாற்றில் கேரளாவிலிருந்து 18 வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். கேரளா சார்பில் ராதிகா சுரேஷ் என்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். அவர் தவிர மீதமுள்ள அனைவரும் தடகள வீராங்கனைகள்தான்.
இப்படி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தடகள வீராங்கனைகளை வரிசையாக இந்தியாவிற்கு தந்து வரும் கேரளாவில் இருந்து இம்முறை யாரும் பங்கேற்கவில்லை என்பது பெரிய வருத்தமாக அமைந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இம்முறை கேரளா சார்பில் 9 ஆண்கள் பங்கேற்கின்றனர். இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்ஶ்ரீஜேஷ், நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தவிர மற்ற 7 பேரும் தடகளத்தில் பங்கேற்க உள்ளனர். ஶ்ரீசங்கர்(நீளம் தாண்டுதல்), கே.டி.இர்ஃபான்(20கிலோ மீட்டர் நடை), எம்.பி.ஜபிர்(400 மீட்டர் தடை ஓட்டம்), முகமது அனாஸ், நிர்மல் டாம்,அமோஜ் ஜேக்கப், அலெக்ஸ் ஆண்டனி(4*400 மீட்டர்) ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தடகள போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகள் நேற்று டோக்கியோ சென்றனர். தடகள போட்டிகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளன.
மேலும் படிக்க: ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் கண்ட இந்தியர் யார் தெரியுமா?