Mary Kom | தடைகளை தகர்த்தெறிந்த மேரி கோம் - உலகம் வியந்த வீராங்கனையின் கதை !
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்தி செல்ல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகில் இரண்டு விதமான சாதனையாளர்கள் இருப்பது வழக்கம். ஒருவர் சாதிப்பவர் மற்றொருவர் தான் சாதிப்பதுடன் பலரை சாதிக்க தூண்டுபவர். இந்த வகையில் மேரி கோம் இரண்டாவது வகையை சேர்ந்தவர். அவர் சாதிப்பதுடன் மட்டுமல்லாமல் பலரையும் சாதிக்க தூண்டிய பெருமை அவரை சேரும். ஏனென்றால் அவரது வாழ்க்கையில் அவ்வளவு தடைகளை கடந்து ஒரு பெண்மணி இப்படி சாதனை படைத்துள்ளது பலருக்கு பெரிய முன்னுதாரணம்.
ஒளவையாரின் ஆத்திசூடியில் இடம்பெற்ற ஊக்கமது கைவிடேல் என்பதற்கு ஒரு பெரிய சான்று மேரி கோமின் வாழ்க்கை. வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை தோல்வி என்ற தடைகள் உன் கண் முன்னே தெரியாது என்று ஒரு கூற்று உண்டு. இந்தக் கூற்று ஏற்றவாறு வெற்றி வேட்கையுடன் பயணம் செய்தவர் மேரி கோம்.
இளம் பருவம்:
1983ஆம் ஆண்டு மணிப்பூரின் கங்காதேய் என்ற பகுதியில் பிறந்தவர் மேரி கோம். இவருடைய தாய் மற்றும் தந்தை அங்கு இருந்த வயல்களில் விவசாயம் செய்து வந்தனர். 4 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் முதல் நபராக பிறந்த மேரி பெற்றோர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். பள்ளி பருவத்தில் தடகளத்தில் முனைப்பு காட்டி வந்தார். பின்னர் கால்பந்து மற்றும் ஹாக்கி ஆகிய விளையாட்டுகளிலும் களமிறங்கி வந்தார். 7ஆம் வகுப்பிற்கு பின் பள்ளி படிப்பை இவர் நிறுத்த வேண்டிய சூழல் உருவானது. அப்போது விளையாட்டு தான் தனக்கு முக்கியமான கருவியாக இருக்கும் என்பதை மேரி கோம் முடிவு செய்தார்.
1998ஆம் ஆண்டு ஆசிய குத்துச்சண்டை போட்டியில் மணிப்பூர் வீரர் டிங்கோ சிங் தங்கம் வென்று அசத்தினார். அவரின் வெற்றி செய்தி மணிப்பூர் முழுவதும் பரவியது. அது பலருக்கு வெறும் செய்தியாக இருந்தது. ஆனால் மேரி கோமிற்கு அது தூண்டுகோளாக அமைந்தது. இவருடைய தந்தை சிறு வயதில் மல்யுத்த வீரராக இருந்துள்ளார். அதனாலோ என்னவோ இவருடைய உடம்பிலும் சண்டை செய்யும் எண்ணம் அதிகம் இருந்துள்ளது. 2000ஆம் ஆண்டு முறைப்படி குத்துச்சண்டை பயிற்சியில் இறங்கினார். எனினும் அதற்கு மற்ற வீட்டை போல் இவருடைய தந்தையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தந்தையின் எதிர்ப்பையும் மீறி அவருக்கு தெரியாமல் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மெக்னிஃபிசென்ட் ‘மேரி’:
2000ஆம் ஆண்டில் முதல் முறையாக மாநில குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் 2002,2005,2006,2008 என தொடர்ச்சியாக 46 கிலோ எடைப்பிரிவில் நான்கு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.
மீண்டும் 2010 ஆண்டு 48 கிலோ எடைப்பில் தங்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டிகளில் 48 கிலோ எடை பிரிவு நீக்கப்பட்டதால் அவர் 51 கிலோ எடைப்பிரிவிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் 2010 ஆசிய போட்டிகளில் 51 கிலோ பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்றார். 2012ஆம் ஆண்டு ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று தங்கம் பதக்கம் வென்றார். அத்துடன் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
லண்டன் ஒலிம்பிக் டூ டோக்கியோ ஒலிம்பிக்:
2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு முதல் முறையாக இவர் தகுதி பெற்றார். அதில் 51 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட மேரி கோம் அரையிறுதில் நிகோலா அடெம்ஸ் இடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 51 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இவருடைய சிறப்பான செயல்பாட்டை பாராட்டு இந்திய அரசு பத்மஶ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷண், ராஜீவ் காந்த் கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளை அளித்துள்ளது.
எத்தனை பதக்கங்கள் மற்றும் விருதுகள் வென்றாலும் மேரி கோம் கனவில் உள்ள ஒரே பதக்கம் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தான். 2012ஆம் ஆண்டு அதை வெல்ல தவறிய இவர் 2016ஆம் ஆண்டு ரியோவில் வெல்ல வேண்டும் என்று இருந்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு இவரால் தகுதி பெற முடியவில்லை. இதன்பின்னர் மீண்டும் 48 கிலோ எடைப்பிரிவிற்கு திரும்பி பயிற்சி செய்து வந்தார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தப் பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 தங்கப்பதக்கங்கள் வென்ற கியூபா வீரர் ஃபெலிக்ஸின் சாதனையை சமன் செய்தார்.
இந்த உத்வேகத்துடன் ஒலிம்பிக் போட்டிக்கான எடைபிரிவான 51 கிலோவிற்கு மீண்டும் திரும்பினார். 2019ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்றார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பை மேரி கோம் உறுதி செய்தார். இதன் மூலம் 38 வயதாகும் மேரி கோம் தன்னுடைய நீண்ட நாள் கனவை எட்ட மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
Loyalty, Hard work, Patience...and don't fear to chase your dream. pic.twitter.com/7npOYbpIyq
— M C Mary Kom OLY (@MangteC) June 15, 2021
இந்த 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல அவருடைய பாதை எவ்வளவு எளிதாக இல்லை. ஏனென்றால் முதல் குடும்பத்தினர் எதிர்ப்பு, பின்னர் 2005ல் குழந்தை பிறப்பு எனப் பல தடைகள் வந்தது. அத்துடன் 48 கிலோ மற்றும் 51 கிலோ என மாறி போட்டியிட வேண்டியதால் உடல் எடையை ஏற்றவும் இறக்கவும் பெரும் சிரமம் இருந்தது. இந்த தடைகள் எதையும் அவர் பொருட்படுத்தவே இல்லை. இதனால் தான் அவர் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். இலக்கை நோக்கி செல்லும் ஒருவருக்கு நடுவே வரும் தடைகள் பெரிதாக தெரியாது. அதேபோல் எத்தனை தடைகள் வந்தாலும் தன்னுடைய இலக்கான ஒலிம்பிக் தங்கத்தை வெல்லாமால் இவர் ஓய மாட்டார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் தங்கம் மேரியின் குத்துச்சண்டை வாழ்க்கைக்கு நல்ல பரிசாக அமையும்.
மேலும் படிக்க: நியூஸ்பேப்பர் விநியோகம் To பாரா ஒலிம்பிக் தங்கம்..! தங்கமகன் மாரியப்பனின் பயணம்..!