நியூஸ்பேப்பர் விநியோகம் To பாராலிம்பிக்கில் தங்கம், வெள்ளி வென்ற மாரியப்பனின் பயணம்..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பயன் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்தி செல்ல உள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த உயரம் தாண்டுதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், மாரியப்பன் வெள்ளிப்பதக்கமும் ஷரத் குமாருக்கு வெண்லகப் பதக்கமும் கிடைத்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் மாரியப்பன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் பதக்கம் வென்றுள்ளது தமிழ்நாட்டிற்கே பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் மாரியப்பன் தன்னுடைய வாழ்க்கையில் கடந்த வந்த தடைகள் என்னென்ன?
காலை இழக்க வைத்த விபத்து:
சேலம் மாவட்டத்தின் பெரியவடுகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு சிறுவயதாக இருக்கும்போதே இவருடைய தந்தை குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதன் காரணமாக 6 குழந்தைகளையும் இவருடைய தாய் சரோஜா பல கூலி வேலைகளை செய்து காப்பாற்றி வந்துள்ளார். இதன்காரணமாக படித்து முன்னேற வேண்டும் என்று மாரியப்பன் நினைத்துள்ளார். எனினும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்து இவருடைய வாழ்க்கையே புரட்டி போட்டுள்ளது. 9 வயது சிறுவனாக இருந்த மாரியப்பன் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார். அதில் பேருந்தின் சக்கரம் இவருடைய கால்கள் மீது ஏறியுள்ளது. இதனால் தன்னுடைய ஒரு காலை இவர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நியூஸ் பேப்பர் விநியோகம் To பாரா ஒலிம்பிக் போட்டிகள்:
இந்த விபத்திற்கு பிறகு மாரியப்பன் முடங்கி இருக்கவில்லை. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். ஏற்கெனவே பள்ளியில் விளையாட்டில் சிறந்த விளங்கிய மாரியப்பனுக்கு ஒரு கால் இழந்தவுடன் சோகமாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் இவருடைய பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் தடகளத்தில் கவனம் செலுத்தக் கூறியுள்ளார். இதன் காரணமாக பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். ஒரு பக்கம் விளையாட்டில் கவனம் செலுத்தினாலும், மற்றொரு புறம் தன்னுடைய குடும்பத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வந்துள்ளார். 2012-ஆம் ஆண்டு முதல் 2015 வரை அவரால் முடிந்த அனைத்து வேலைகளையும் செய்துள்ளார். நியூஸ் பேப்பர் போடுவது முதல் கூலி தொழிலாளி வரை அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். ஒருநாளைக்கு குறைந்தது 200 ரூபாய் வரை சம்பாதித்து தன்னுடைய தாய்க்கு உதவியுள்ளார்.
‘கையை இழந்தார் நம்பிக்கையை இழக்கவில்லை’- மூன்றாவது ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கி ஜஜாரியா !
ரியோ பாராலிம்பிக்:
மாரியப்பன் தங்கவேலுவை பயிற்சியாளர் சத்யநாராயணா 2013-ஆம் ஆண்டு தேசிய பாராலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பார்த்துள்ளார். அப்போது மாரியப்பனின் திறமையை உணர்ந்த பயிற்சியாளர் மாரியப்பனை பெங்களூருவிற்கு அழைத்து பயிற்சி அளித்துள்ளார். அதன்பின்னர் 2015-ஆம் ஆண்டு சர்வதேச பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார். 2016ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் 1.78 மீட்டர் உயரம் தாண்டி ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக் போட்டியில் டி-42 உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் ஆசிய சாதனையையும் படைத்தார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். மேலும் அவர் 2020 பாராலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்று அசத்தியுள்ளார்.
கேல் ரத்னா விருது:
2020ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதை பெற்று மாரியப்பன் தங்கவேலு மொத்த தமிழ்நாட்டிற்கும் பெரிய பெருமை பெற்று தந்தார். ஏனென்றால், 1991-92ஆம் ஆண்டு முதல் முறையாக கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது. முதல் கேல் ரத்னா விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வென்று அசத்தினார். அவருக்குப் பிறகு 28 ஆண்டுகள் கழித்து மாரியப்பன் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கேல் ரத்னா விருது வென்ற பிறகு பேட்டியளித்த மாரியப்பன் ,”நான் தொடக்க காலத்தில் கஷ்டப்பட்டது மற்றும் என்னுடைய அம்மா கஷ்டப்பட்ட அந்த நினைவுகள் எல்லாம் இப்போது என் கண் முன் வந்து போகின்றன. தற்போது எனக்கு பயிற்சியாளர் வேலை கிடைத்துள்ளது. மேலும் என்னுடைய குடும்பம் பொருளாதாரத்தில் சற்று மேம்பட்டுள்ளது. இதனால் நாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளோம். நான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
என்னுடைய ஒரே நோக்கம் டி-42 உயரம் தாண்டுதல் பிரிவில் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதுதான். இந்தப் பிரிவில் அதிகபட்சமாக 1.96 மீட்டர் உயரம் மட்டுமே தாண்டப்பட்டுள்ளது. இதனை நான் முறியடித்து 2 மீட்டர் உயரம் தாண்டுவேன். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்த உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வெல்வதே எனது லட்சியம் ” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உலக சாதனை படைக்க முடியாமல் போனாலும், கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும் பயிற்சி செய்து டோக்கியோ பயணம் சென்று வெள்ளிப்பதக்கத்தை வென்று இந்தியா திரும்ப உள்ளார் மாரியப்பன். பாராலிம்பிக்கில் அடுத்தடுத்து பதக்கம் வென்றதே சாதனைதான்! இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் மாரியப்பனின் போட்டிக்காக காத்திருந்தது, பதக்கம் வென்றவுடன் கொண்டாடியது.
வாழ்த்துகள் மாரியப்பன்!
மேலும் படிக்க: ‘உலக பேட்மிண்டனை அசரவைத்த சிந்து மொமெண்ட்ஸ்’ : ஹேப்பி பர்த்டே டியர் சிந்து..!