Malaysia Masters Badminton: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து, பிரணாய்
மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் பிரணாய் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், பிரணாய், சாய் பிரணீத், கஷ்யப் உள்ளிட்ட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் பி.வி.சிந்து, பிரணாய், கஷ்யப், சாய் பிரணீத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் பி.வி.சிந்து சீன வீராங்கனை ஸாங்க் யியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே பி.வி.சிந்து ஆதிக்கம் செலுத்தினார். இந்தப் போட்டியை 21-12,21-10 என்ற கணக்கில் எளிதில் வென்றார். அத்துடன் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரணாய் ஸூ வே வாங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை பிரணாய் 21-19 என்ற கணக்கில் போராடி வென்றார். அடுத்து நடைபெற்ற இரண்டாவது கேமில் பிரணாய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த கேமை 21-16 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 21-19,21-16 என்ற கணக்கில் போட்டியை வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
H.S Prannoy sails into QF of Malaysia Masters (BWF World Tour Super 500) with 21-19, 21-16 win over WR 16 Wang Tzu Wei in 2nd round. #MalaysiaMaster2022 pic.twitter.com/yrs1zAnrSe
— India_AllSports (@India_AllSports) July 7, 2022
மற்றொரு இந்திய வீரர் சாய் பிரணீத் சீனாவின் ஃபெங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சீன வீராங்கனை ஃபெங்க் 21-14,21-17 என்ற கணக்கில் பிரணீத்தை வீழ்த்தினார். அதேபோல் மற்றொரு வீரரான கஷ்யப் இந்தோனேஷியா வீரர் ஆந்தோனி கிண்டிங்கை எதிர்த்து விளையாடினார். கிண்டிங் 21-10,21-15 என்ற கணக்கில் போட்டியை வென்றார். இதனால் கஷ்யப் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதிச் சுற்றில் பி.வி.சிந்து தாய் சு யிங்கை எதிர்த்து விளையாடுகிறார். தாய் சு யிங்-சிந்து ஆகியோர் 21 முறை விளையாடியுள்ளனர். அவற்றில் தாய் சு 15 முறையும் பி.வி.சிந்து 6 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். ஆகவே நாளைய போட்டி சிந்துவிற்கு சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்