Watch Video: நீண்ட நாட்களுக்கு பிறகு டென்னிஸ் களத்தில் ரோஜர் ஃபெடரர்.. வைரல் வீடியோ... !
நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் பயிற்சியை தொடங்கியுள்ளார்.
டென்னிஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் ரோஜர் ஃபெடரர். இவர் 24 ஆண்டுகளாக டென்னிஸ் உலகை கலக்கி வந்தார். இந்தச் சூழலில் திடீரென்று அவர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இவருடைய ஓய்வு முடிவு பலரையும் அதிர்ச்சியை அடைய வைத்திருந்தது. அடுத்த வாரம் தொடங்கும் லெவர் கப் தொடர் உடன் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் லெவர் கப் தொடருக்காக ரோஜர் ஃபெடரர் லண்டன் சென்றுள்ளார். அந்தத் தொடரில் ஐரோப்பிய அணிக்காக ரோஜர் ஃபெடரர் களமிறங்குகிறார். இந்தச் சூழலில் அவர் இன்று தன்னுடைய பயிற்சியை தொடங்கினார். அவர் சக வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிட்பாஸ் உடன் இன்று பயிற்சி மேற்கொண்டார். அப்போது டென்னிஸ் ஜாம்பவான் வீரர் போர்ஜன் பெர்க் உடன் இருந்தார். இவர்கள் பயிற்சி செய்வது மற்றும் படம் எடுத்து கொண்டது ஆகிய அனைத்தும் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
Roger Federer and Stefanos Tsitsipas take their first steps (and swings) back on the #LaverCup court ...
— Laver Cup (@LaverCup) September 20, 2022
... with a little help from Bjorn Borg. pic.twitter.com/jp1a9VLsBG
நீண்ட நாட்களுக்கு பிறகு டென்னிஸ் களத்தில் ரோஜர் ஃபெடரரை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் பலரும் இந்தப் பதிவை வைரலாக்கி வருகின்றனர். 24 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் ரோஜர் ஃபெடரர் 3வது இடத்தில் உள்ளார்.
ஃபெடரரின் ஓய்வு தொடர்பாக சக டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் ஒரு பதிவை செய்திருந்தார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ரஃபேல் நடால் பதிவிட்டிருந்தார். அதில், “அன்புக்குரிய ரோஜர், என்னுடைய நண்பர், போட்டியாளர். இந்த நாள் வந்திருக்கவே வேண்டாம் என்று நினைத்தேன். எனக்கும் டென்னிஸ் விளையாட்டிற்கும் சோகமான நாள் இது. உங்களுடன் இத்தனை நாட்கள் விளையாடியதை மிகுந்து மகிழ்ச்சியும், கௌரவுமாகவும் கருதுகிறேன். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல நல்ல தருணங்கள் இருந்தது.
Team Europe hits the practice court with a special trio: Roger, Stefanos and Bjorn.#LaverCup pic.twitter.com/axVcl1w2fi
— Laver Cup (@LaverCup) September 20, 2022
இது போன்ற தருணங்கள் நம்மக்குள் மேலும் இருக்கும். ஏனென்றால் நாம் சேர்ந்து செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறையே உள்ளன. அது உங்களுக்கு தெரியும். தற்போது நீங்கள் உங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். லண்டனில் விரைவில் சந்திப்போம்” எனப் பதிவிட்டிருந்தார்.
ரோஜர் ஃபெடரர் vs ரஃபேல் நடால்:
டென்னிஸ் களத்தில் மிகச் சிறந்த ஆட்டங்களில் எப்போதும் ரோஜர் ஃபெடரர் மற்றும் நடால் ஆகியோருக்கு எதிரான போட்டி இருக்கும். இவர்கள் இருவரும் டென்னிஸ் களத்தில் 40 முறை எதிராக மோதியுள்ளனர். அவற்றில் நடால் 24 முறையும், ஃபெடரர் 16 முறையும் வென்றுள்ளனர். குறிப்பாக கடைசியாக இவர்களுக்கு இடையே நடைபெற்ற 8 போட்டிகளில் 7ல் ஃபெடரர் வெற்றி பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு விம்பிள்டன் அரையிறுதியில் கடைசியாக ஃபெடரர் நடால் மோதியிருந்தனர். அதில் ரோஜர் ஃபெடரர் 4 செட்களில் போராடி போட்டியை வென்று இருந்தார். அதன்பின்னர் இருவரும் டென்னிஸ் களத்தில் சந்திக்கவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் போட்டி எப்போதும் டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கும்.
ரோஜர் ஃபெடரர் தன்னுடைய 24 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் சுமார் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். அத்துடன் 310 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தார். அதிக முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற வீரர் ரோஜர் ஃபெடரர் தான். இவர் 8 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.