கோவில்பட்டி 12வது அகில இந்திய ஹாக்கி போட்டி: தென்மேற்கு ரயில்வே அணியை வீழ்த்திய கோவில்பட்டி அணி
11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பன்னிரெண்டாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவின் முதல் போட்டியை தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு அலுவலர் பி.ராமசாமி துவக்கி வைத்தார்.
11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. எ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து, எ பிரிவில் பஞ்சாப் நேஷனல் பேங்க் - நியூ டெல்லி, ரயில் வீல் பேக்டரி - பெங்களூர், நிஸ்வாஸ் ஹாக்கி அணி - பாம்போஷ், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் - சென்னை, பி பிரிவில் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா - நியூ டெல்லி, யூனியன் பேங்க் - மும்பை, சவுத் வெஸ்டர்ன் ரயில்வே - ஹூப்பள்ளி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி, சி பிரிவில் சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், கனரா பேங்க் - பெங்களூரு, கஸ்டம்ஸ் - புனே, இந்தியன் பேங்க் - சென்னை, டி பிரிவில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு - நியூ டெல்லி, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸிஸ் - சென்னை, சாய் எஸ்டிசி - பெங்களூரு மற்றும் தமிழ்நாடு போலீஸ் - சென்னை ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
துவக்கவிழாவான நடந்த முதல் லீக் போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், மும்பை யூனியன் பேங்க் அணியும் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றிப் பெற்றது.2வது லீக் ஆட்டத்தில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியுடன் பெங்களூர் ரயில் வீல் பேக்டரி அணி மாலை 6.45 மணியளவில் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வெற்றிப் பெற்றது.3வது லீக் ஆட்டத்தில் ஹூப்பள்ளி சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி இரவு 8.15 மணியளவில் மோதின.இதில் 6:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.