மோசமான தோல்விக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் ஷாருக்கான்..
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்ததற்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 5-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த ரன்களை கொல்கத்தா அணி ஈஸியாக சேஸ் செய்துவிடும் என ரசிகர்கள் நம்பினார். ஆனால், நடந்ததோ வேறு.
கொல்கத்தா ஓபனிங் பேட்ஸ்மேன் ரானா, சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால், மோர்கன், ரஸல் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். கடைசிவரை களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் அணியை வெற்றிபெற வைத்துவிடுவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் இருந்தது. ஆனால், அனுபல பவுலர்களான போல்ட், பும்ரா சிறப்பாக பந்துவீசி கட்டுப்படுத்திவிட்டனர்.
16-வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் என்ற நிலையில் கொல்கத்தா இருந்தது. 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி. ஆனால், கடைசி 4 ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை அந்த அணி பறிகொடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், 10 ரன்கள் வித்தியாசத்தின் மும்பை வெற்றி பெற்றது. ஈஸியாக ஜெயிக்கவேண்டிய போட்டியை, பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் கொல்கத்தா தோல்வி அடைந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அந்த அணியை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், கொல்கத்தா அணி அடைந்த தோல்விக்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஏமாற்றம் அளிக்கும் செயல்பாடு. குறைந்தபட்சமாக கூற வேண்டுமென்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம்’ எனப் பதிவிட்டார்.