Women’s IPL: விரைவில் மகளிர் ஐபிஎல் தொடர்.. களமிறங்குகிறாரா மித்தாலி..? காத்திருக்கும் ரசிகர்கள்..!
மகளிர் ஐபிஎல் தொடரில் மிதாலி ராஜ் பங்கேற்றால் நிச்சயம் தொடர் சிறப்பானதாக அமையும் என்று பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ், வரும் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற மகளிர் ஐபிஎல் போட்டிக்காக பிசிசிஐ ஏராளமான ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதில், முதல் கட்டமாக இந்த தொடரில் பங்கேற்கும் 5 அணிகளின் பெயர்கள் ஜனவரி கடைசி வாரத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
பல ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முகமாக மிதாலி இருந்து வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் மிதாலி ராஜ் பங்கேற்றால் நிச்சயம் தொடர் சிறப்பானதாக அமையும் என்று பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஒரு தரப்பில் இருந்து மிதாலி ராஜ் தனது ஓய்வை திரும்ப பெறலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஜீலை மாதம் முன்னாள் இங்கிலாந்து வீரர் இஷா குஹா மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஃபிரான்கி மெக்கே ஆகியோருடனான உரையாடலில், மிதாலி மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பதாக குறித்து சூசகமாக தெரிவித்தார்.
அதில் பேசிய மிதாலி ராஜ், ”ஐபிஎல் தொடரில் விலகுவது குறித்து நான் இன்னும் எதுவும் முடிவெடுக்கவில்லை. மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ளன. மகளிர் ஐபிஎல் முதல் பதிப்பில் பங்கேற்பது மிகவும் அழகாக இருக்கும்” என தெரிவித்தார்.
The Women's IPL will be a game-changer for women's cricket and cricket in general. This development represents a significant milestone in that regard. Looking forward to an outstanding tournament. @BCCI, @BCCIWomen, @JayShah Sir. https://t.co/7kQ2vgPwRx
— Mithali Raj (@M_Raj03) January 16, 2023
40 வயதான மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணிக்காக 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களை குவித்துள்ளார். அவர் கடைசியாக இந்தியாவுக்காக 2019 ல் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 போட்டியில் விளையாடி இருந்தார். அதன்பிறகு கடந்த ஜீன் 2022 வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஜூலன் விளையாடுவாரா?
மிதாலியை தொடர்ந்து முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியும் பெண்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும்.
இதுகுறித்து முன்னதாக ஜூலன் கோஸ்வாமி பேசியபோது, இதுவரை அதுகுறித்து முடிவு எதுவும் செய்யவில்லை. மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வரும் சீசனில் வரலாம் என நம்புகிறோம். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம் பிறகு முடிவு செய்வேன். இந்த நேரத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் ரசித்திருக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
மிதாலி மற்றும் ஜூலன் இருவரும் இந்திய மகளிர் அணிக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.