Jacob Bethall: ஆர்சிபி-யின் புது அஸ்திரம்; சிக்ஸர் மன்னன் ஜேக்கப் பெத்தேல் - யார் இந்த விடிவெள்ளி?
Jacob Bethell: ஆர்.சி.பி. அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாகவும், வில் ஜேக்ஸிற்கு மாற்றாகவும் ஜேக்கப் பெத்தேல் திகழ்வார் என்றும் ரசிகர்கள் நம்புகின்றனர்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கிரிக்கெட் தொடர் ஐபிஎல். டி20 கிரிக்கெட்டை அதிகளவு மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தில் ஐ.பி.எல். தொடர் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆர்.சி.பி.:
அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் ஆடும் வீரர்களுக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியை வலுப்படுத்த பல வீரர்களை தங்கள் பக்கம் இழுத்தது.
அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஆர்.சி.பி. அணி தங்களது நட்சத்திர வீரர்களான டுப்ளிசிஸ், மேக்ஸ்வெல், சிராஜ், வில் ஜேக்ஸ் ஆகியோரை விடுவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களாக பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், குருணல் பாண்ட்யா, டிம் டேவிட், ரோமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், லுங்கி நிகிடி, நுவான் துஷார் ஆகியாரை ஏலத்தில் எடுத்தனர்.
வில் ஜேக்சின் மாற்று:
ஆர்.சி.பி. தங்களது அணியில் இருந்து மேக்ஸ்வெல், டுப்ளிசிஸ் ஆகியோரை விடுவித்தாலும் வில் ஜேக்சை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தாரை வார்த்தது பெங்களூரு ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வில் ஜேக்ஸிற்கு நிகரான ஒரு வீரரை ஆர்.சி.பி. அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்த வீரர் ஜேக்கப் பெத்தேல்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் பெத்தேல் இடது கை பேட்ஸ்மேன் மட்டுமின்றி இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2001ம் ஆண்டு பிறந்த ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து நாட்டின் புது பென் ஸ்டோக்சாக உருவெடுத்துள்ளார். இதுவரை 7 டி20 போட்டிகளில் ஆடி 173 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 173 ரன்களை விளாசியுள்ளார்.
சிக்ஸர் மன்னன்:
உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் மொத்தமாக 52 டி20 போட்டிகளில் ஆடி 6 அரைசதங்களுடன் 909 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 71 ரன்களை ஒரே போட்டியில் விளாசியுள்ளார். 47 சிக்ஸர்களையும், 66 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 24 போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 506 ரன்களும், முதல்தர கிரிக்கெட்டில் 20 போட்டிகளில் 738 ரன்களும் எடுத்துள்ளார். 8 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 167 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 32 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்து இங்கிலாந்து 218 ரன்கள் குவிக்க உதவினார். அதே தொடரின் கடைசிப் போட்டியில் 182 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணிக்காக 36 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
நம்பிக்கை நட்சத்திரம்:
இங்கிலாந்து அணியின் வளரும் நட்சத்திரமான ஜேக்கப் பெத்தேல் வரும் ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. அணிக்காக தவிர்க்க முடியாத நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்வார் என்று ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் எதிர்பாரக்கின்றனர்.
ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து அணி மட்டுமின்றி இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக தனது கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினார். மேலும், பர்மிங்காம் பீனிக்ஸ், வார்விக்ஷைர், வெல்ஸ்பையர் அணிக்காக ஆடியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளரான ஜேக்கப் பெத்தேல் டி20 யில் 7 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 19 விக்கெட்டுகளையும், முதல் தர கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.