சென்னை அணிக்கு தூணாக நிற்கும் வீரர்கள் யார் யார்? தோனி வைத்திருக்கும் இரண்டு இலங்கை ஆயுதங்கள்!
இந்த நிலையை அடைய சென்னை அணிக்கு ஒற்றை வீரர் மட்டுமே செயல்படுவது கிடையாது. அது சென்னையின் பாணியே அல்ல. எப்போதுமே சென்னையில் 11க்கும் மேற்பட்ட நாயகர்கள் இருப்பார்கள்.
ஐபிஎல் 2023 இன் இறுதிப்போட்டி இதோ வந்துவிட்டது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு குஜராத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முதல் ஆளாக வந்த நிலையில், அதற்கு பங்காற்றிய முக்கிய வீரர்கள் குறித்து கண்டிப்பாக நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் இறுதிப்போட்டியிலும் சென்னை அணி கோப்பையை வெல்ல உதவப்போகிறார்கள்.
சிஎஸ்கே இறுதிப்போட்டி வந்த விதம்
இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய சென்னை அணி, முதல் போட்டியில் குஜராத் அணியுடன் இதே அகமதாபாத் மைதானத்தில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அதன் பின் வெகுண்டெழுந்து முன்னேறிய அணியை, கேப்டன் தோனி சிறப்பாக வழிநடத்தி முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம்தான் என்றாலும், முதலிடம் பிடித்த குஜராத் அணியை முதல் குவாலிபையரில் வென்று இறுதிப்போட்டி ஸ்பாட்டில் ஜம்மென்று அமர்ந்தது தோனி தலைமையிலான அணி. தற்போது மீண்டும் குஜராத் அணியை எதிர்த்து இறுதிப்போட்டியில் ஆட காத்திருக்கிறது. இந்த நிலையை அடைய சென்னை அணிக்கு ஒற்றை வீரர் மட்டுமே செயல்படுவது கிடையாது. அது சென்னையின் பாணியே அல்ல. எப்போதுமே சென்னையில் 11க்கும் மேற்பட்ட நாயகர்கள் இருப்பார்கள். இப்போதும் அதுதான் கதை என்றாலும், அதிலும் தொடர்ச்சியாக அணியை நல்ல நிலைக்கு எடுத்து வர போராடியவர்கள் சிலர் உண்டு.
சிவம் தூபே
இந்த தொடரில் சென்னை அணியின் அசகாய சூரனாக, கால்களை அசைக்காமல், ஆணியடித்தது போல நின்று சிக்சரடித்து அசத்தி வரும் சிவம் தூபே அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நடுப்பகுதி ஓவர்களில் அவரது அதிரடி சென்னை அணியின் ரன் ரேட் குறையாமல் இருக்க உதவும்.
ஜடேஜா
சென்னை அணியோடு ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், சென்னை ரசிகர்களே அவர் ஆட்டமிழந்தால் கொண்டாடினாலும், தோனிக்காக ஆடும் அவர் அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சென்னை மைதானத்தில் அவரது சுழல் பல விக்கெட்டுகளை குவித்து அணிக்கு பெரிதும் உதவிய நிலையில், அவருடைய சொந்த ஊரில் நடக்கும் இறுதிப் போட்டியிலும் முக்கியமான விக்கெட்டுகளை தூக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து இருவர்
மலிங்கா போலவே பவுலிங் ஆக்ஷன் கொண்ட ஒரு இளம் வேகம் சென்னை அணிக்கு வரமாக வந்துள்ளது. பதிரனாவை அவரது திறனை கண்டறிந்த தோனி கடைசி 8 ஓவர்களில் அவரை வைத்து செய்யும் மாயம் பல வெற்றிகளுக்கு இழுத்து சென்றுள்ளது. அவர் வீசும் துல்லியமான யார்கர்களை, வித்தியாசமான ஆங்கிளில் வரும் பவுன்சர்களை, என்ன செய்வதென்று எந்த பேட்ஸ்மேனும் கண்டுபிடிப்பதற்கு முன்பே தொடர் முடியப்போகிறது. அவரது 4 ஒவர்களை தோனி பயன்படுத்தும் விதம் இலங்கை அணிக்கே பெரும் பாடம். அவரோடு மற்றொரு இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனா தனது சுழல் மூலம் இன்னொருபுறம் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். இவர்கள் இருவரை வைத்து தோனி இறுதிப்போட்டியில் என்ன செய்ய காத்திருக்கிறார் என்று பார்ப்பது இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
இந்த ஐபிஎல் குறித்த அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!