IPL Final CSK vs GT: குஜராத் டைட்டனின் முக்கிய தூண்கள்...! சென்னை அணி கட்டம் கட்ட வேண்டியது யார்? யாரை?
கடந்த சீசன் போலவே இந்த சீசன் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது குஜராத் அணி. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருமே ஃபார்மும், தன்னம்பிக்கையுமே காரணம் ஆகும்.
ஐபிஎல் 2023ன் வெற்றியாளரை அறிய இன்னும் ஒரே ஒரு போட்டிதான் மிச்சம் உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இந்த தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணியில் ஆதிக்கம் செலுத்தியது யார்? யார்? என்று தெரிந்துகொள்ளுங்கள். இவர்கள்தான் சென்னை அணிக்கு நாளை பலமான சவாலாக நிற்கப் போகிறார்கள்.
குஜராத் அணியின் ஆதிக்கம்
கடந்த சீசன் போலவே இந்த சீசன் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது குஜராத் அணி. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருமே ஃபார்ம் மட்டுமின்றி தன்னம்பிக்கையுடன் இருப்பதே ஆகும். அதுவே அவர்களுக்கு தனி நபர்களாகவும் ஒரு அணியாகவும் வெற்றியை தருகிறது. அவரவர்களுக்கு ஏற்ற கதாப்பாத்திரத்தை கொடுத்து அதனை கச்சிதமாக செய்யவைத்து வருகிறார்கள் ஹர்திக் - நெஹ்ரா காம்போ. இந்த அணியின் வெற்றிக்கு அவர்களது பாத்திரங்களை சரிவர செய்து வரும் வீரர்கள் யார் யார்?
சுப்மன் கில்
பல ஆண்டுகளுக்கு முன் கோலியை பார்த்தது போலவே இருப்பதாக பலர் கூறும் அளவுக்கு உயர்ந்துள்ளது சுப்மன்கில் பேட்டிங் திறன். இந்த தொடரில் அதிகபட்ச ரான்னை குவித்தது மட்டுமின்றி, 851 ரன்கள் ஒட்டுமொத்தமாக 16 இன்னிங்ஸ்களில் எடுத்து அற்புதமான ஃபார்மை காண்பித்து வருகிறார். அந்த அணி பேட்டிங் லைன் அப்பில் எல்லோருமே சிறிய சிறிய பங்களிப்பை தொடர்ந்து அளித்து வந்தாலும், பெரும் பங்களிப்புகள் இவரிடம் இருந்து மட்டுமே வந்துகொண்டிருக்கின்றன. இவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் அதனை சென்னை அணி வெற்றியை விட பெரிதாக கொண்டாடலாம்.
ரஷீத் கான்
எல்லா சீசனையும் போலவே இந்த சீசனிலும் சிறந்த ஸ்பின்னராக தன்னை நிரூபித்திருப்பவர் பல தருணங்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி, பேட்டை கையில் கொடுத்தால் ஒரு சுழற்று சுழற்றி சிக்ஸர்களை குவிக்கும் ஆல்ரவுண்டராகவும் அணிக்கு மிகவும் முக்கியமான வீரராக திகழ்கிறார் ரஷீத்.
முகமது ஷமி
பவர் பிளே விக்கெட்டுகள் டி20 போட்டிகளில் எவ்வளவு முக்கியம் என்பதை இந்திய அணியின் சீனியர் வீரர் ஷமி திரும்ப திரும்ப உணர்த்துகிறார். டி 20 என்றால் இளைஞர்கள் தளம் என்ற மனநிலையை மாற்றும் விதமாக இருக்கும் ஒரு சில வீரர்களின் செயல்பாட்டில் மிக முக்கியமானவர் இவர். 28 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியையும் வைத்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
மோஹித் ஷர்மா
தோனி பிராடக்ட் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இந்த சீசனில் அவர் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார். 13 போட்டிகள் ஆடியுள்ள அவரை ஆரம்பத்தில் ஜிடி அணி ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தது. ஆனால் வந்த முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றார். நேற்றைய குவாலிபையர் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியதோடு ஒட்டுமொத்தமாக 24 விக்கெட்டுகள் வீழ்த்தி ஊதா நிற தொப்பியை முகமது ஷமியுடன் தன்வசம் வைத்துள்ளார்.
சாய் சுதர்சன்
குஜராத் அணி கதாப்பாத்திரங்கள் கொடுத்து வீரர்களை அனுப்புவதில் வெற்றி காணும் அணி. அதற்காகவே ஒரு நிலையான, முதிர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் விழாமல் பாதுகாக்கும் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என்பதாலேயே கேன் வில்லியம்சன்னை அணியில் எடுத்தது குஜராத். ஆனால் அவர் முதல் போட்டியிலேயே காயம் அடைய, அந்த இடத்தில் ஓட்டை விழாமல் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன். மும்பை அணிக்கு எதிரான குவாலிபையரிலும் கில்லுக்கு துணையாக, தூணாக நின்று அணியை கொண்டு சென்ற அவரது ஆட்டம் தனித்து நின்றது.
இந்த ஐபிஎல் குறித்த அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!