Watch: பிராவோவின் தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தோனி… வைரலாகும் வீடியோ!
நேற்றைய போட்டி முடிந்த உடன் மகேந்திர சிங் தோனி பேசுவது போன்ற ஒரு வீடியோவை பிராவோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிராவோவின் தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் தோனியின் வீடியோ மற்றும் அணி வீரர்களின் வீடியோக்கள் வைரலாகி உள்ளது.
குடும்பமான சென்னை அணி
நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2023 சீசனில் நேற்றைய போட்டியில் சென்னை அணி சென்னையில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பல ஆண்டுகளாகவே சென்னை அணியை தலைமை தாங்கி வரும் எம்.எஸ்.தோனியின் கீழ் ஆடிய பலரும் ரிட்டயர்ட் ஆகிவிட்ட நிலையில் இந்த சீசன் தோனிக்கு கடைசி தொடராக இருக்கலாம் என்ற ஒரு செய்தி உலா வருகிறது. இதனை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும், நடப்பு ஐபிஎல் தொடரில் உள்ள ஹோம் போட்டிகளை கண்டு கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். சென்னை அணியில் இருந்த ரெய்னா, வாட்சன், ஹஸ்ஸி, பிராவோ போன்ற பலர் ஓய்வு பெற்றிவிட்டாலும் ஒரு குடும்பமாக வளர்ந்த அணியினர் பலரும் இன்னும் மைதானத்தில் தான் உள்ளனர்.
View this post on Instagram
பிராவோ - தோனி
நேற்றைய போட்டிக்கு ரெய்னா வபதிருந்ததோடு மேலும் ஹஸ்ஸி, பிராவோ போன்றோர் அணியின் மெண்டராக இருப்பதால் எப்போதுமே அணியோடு இருக்கும் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தந்துகொண்டிருக்கிறார்கள். இதில் குறிப்பாக தோனிக்கு பிராவோவுடனான நட்பு என்பது மிகவும் பெரிது. இருவரும் பல ஆண்டுகளாக இணைந்து ஆடி வரும் நிலையில், மைதானத்திற்கு வெளியிலும் இருவருக்கும் இடையேயான நட்பு பலராலும் ரசிக்கக்கூடிய விஷயம் ஆகும்.
இணைபிரியா நட்பு
2017 இல் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு சென்ற போது கூட தோனி மற்றும் சக வீரர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் பிராவோ. அதுமட்டுமின்றி சென்னை அணிக்காக, குறிப்பாக தோனிக்காக ஒரு ஆல்பம் பாடல் ஒன்று உருவாக்கி வெளியிட்டிருந்தார். சென்னை மக்களும் பிராவோவை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கத் துவங்கினர். களத்திலும் கடைசி ஓவர்கள் ஸ்பெஷலிஸ்டாக இருந்த பிராவோவை சரியாக 17 வது மற்றும் 19 வது ஓவர்களில் சரியாக பயன்படுத்தி எண்ணற்ற விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் தோனி. அவரையும் அவரது திறன்களையும் சரிவர புரிந்துகொண்ட ஒரே கேப்டனாக தோனி இருந்தார்.
View this post on Instagram
வைரலாகும் வாழ்த்துகூறும் வீடியோ
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கூட தோனி அவருக்கு விசிலடிக்க கற்றுத் தரும் வீடியோ வெளியாகி வைரலாகி இருந்தது. தற்போது நேற்றைய போட்டி முடிந்த உடன் மகேந்திர சிங் தோனி பேசுவது போன்ற ஒரு வீடியோவை பிராவோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பேசும் தோனி பிராவோவின் தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார். அவர் ஆங்கிலத்தில், "பிராவோ அம்மாவுக்கு 65வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், கண்டிப்பாக என் சார்பாக கேக் சாப்பிட வேண்டும், நான் பிராவோ வழியாக அனுப்பி வைக்கிறேன்", என்று கூறி இருந்தார். அவர் மட்டுமல்ல அடுத்த வீடியோவில் ரெய்னாவும் வாழ்த்து தெரிவித்திருந்ததோடு, பிராவோ நிறைய மாம்பழம் சாப்பிடுவதாகவும், அவரது வயிற்றுக்கு நல்லதில்லை என்றும் விளையாட்டாக புகார் செய்தார். அடுத்த வீடியோவில் அணி வீரர்கள் ராயுடு, உத்தப்பா, ரெய்னா, தோனி, ஜடேஜா என எல்லோரும் சேர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த வீடியோ பலரால் பகிரப் பட்டு வைரலாகி வருகிறது. வெளியிடப்பட்ட 12 மணி நேரத்தில் ஐந்து லட்சம் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.