IPL 2024: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த ஹசரங்கா.. ஐபிஎல் 2024ல் இருந்து விலகலா..?
வனிந்து ஹசரங்கா இதுவரை இலங்கை அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 196 ரன்கள் மற்றும் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 2023ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, தனது முடிவை மாற்றிக்கொண்ட வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வனிந்து ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தநிலையில், இலங்கை டெஸ்ட் அணிக்கு வனிந்து ஹசரங்கா மீண்டும் திரும்பியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வனிந்து ஹசரங்கா இதுவரை இலங்கை அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 196 ரன்கள் மற்றும் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது தவிர, அவர் இலங்கைக்காக 54 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வருகின்ற மார்ச் 22ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இலங்கை அணி டி20 தொடரையும், வங்கதேச அணி ஒருநாள் தொடரையும் கைப்பறியது.
கடந்த ஆண்டு ஓய்வு:
26 வயதான ஹசரங்கா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஹசரங்காவின் ஓய்வுக்குப் பிறகு, இலங்கை ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. மேலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2022-25 சுழற்சியில் இன்னும் இலங்கை அணி ஒரு வெற்றியைப் பதிவு செய்யவில்லை. ஹசரங்கா டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் கோரிக்கையின்படி, டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஹசரங்கா ஒப்புகொண்டார் என்று கூறப்படுகிறது. மேலும், 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கையின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, இலங்கை டி20 அணியின் கேப்டன் பதவியும் ஹசரங்காவிற்கு வழங்கப்பட்டது.
ஐபிஎல்லில் எப்போது விளையாடுவார்..?
ஐபிஎல் 2024 ஏலத்தில் ஹசரங்காவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் 2024ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மார்ச் 23ம் தேதி ஈடன் கார்டனில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் போட்டியின் ஆரம்ப கட்ட அட்டவணையில் நான்கு போட்டிகளில் ஹைதராபாத் அணி விளையாட உள்ளது. இதையடுத்து, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதால் ஹசரங்கா முதல் மூன்று போட்டிகளில் விளையாடமாட்டார். இதன் காரணமாக வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி ஹைதராபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி: தனஞ்சய் டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், சதிர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், லஹிரு உதாரா, வனிந்து ஹசரங்க, பிரபாத் ஜெயசுரங்கா ரமேஷ் மெண்டிஸ், நிஷான் பீரிஸ், கசுன் ராஜித, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, சாமிக்க குணசேகர.