Virat Kohli Record: 50 அரைசதங்கள்... 7 ஆயிரம் ரன்கள்..! விரட்டல் நாயகன் கோலியின் மிரட்டும் சாதனைகள்..!
Virat Kohli Record: ஐ.பி.எல். வரலாற்றில் 7 ஆயிரம் ரன்கள் மற்றும் 50 அரைசதங்கள் அடித்த வீரர் என்ற அரிய சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.
Virat Kohli Record: பெங்களூரு அணியின் ஆஸ்தான ப்ளேயர்களில் முக்கியமானவர் விராட் கோலி. பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தராமல் ஓயமாட்டேன் என சபதத்துடன் ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008ஆம் ஆண்டில் பெங்களூரு அணியில் வீரராக களமிறாங்கிய விராட் கோலி அதன் பின்னர் அணியின் கேப்டனாக முன்னேறினார். அதன் பின்னர் தானே அந்த பொறுப்பில் இருந்து விலகி அணியில் ஒரு வீரராக விளையாடி வருகிறார்.
அரைசதத்தில் அரைசதம்:
ஒரேவொரு ஐபிஎல் கோப்பைக்காக இவ்வளவு ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ள விராட் கோலிக்கு, கோப்பையைத் தவிர மற்ற அனைத்தும் சாத்தியப்பட்டு விடுகிறது. ஆமாம் ஐபிஎல் தொடரில் நேற்று (மே, 8) டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மேலும் இரண்டு தனிப்பட்ட சாதனைகளை படைத்துள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கிரிக்கெட் உலகின் ரன்மெஷின் எனப்படும் விராட் கோலிக்கு முன்னிலையில் சாதனைகள் எல்லாம் தவிடுபொடிதான். இவர் களமிறங்கினாலே ஏதோ ஒரு சாதனைக்கு அடிபோடுகிறார் என்று அர்த்தம் என நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அப்படியான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் 50 முறை அரைசதம் விளாசியுள்ளார். இந்த சாதனை இவரால் முறியடிக்கப்பட்ட சாதனை அல்ல, இவரால் படைக்கப்பட்ட சாதனை. இந்த சாதனையைப் படைக்க விராட் கோலி இதுவரை 233 போட்டிகளில் விளையாடி அதில் 225 போட்டிகளில் பேட்டிங் செய்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
7 ஆயிரம் ரன்கள்..!
அதேபோல் விராட் கோலி இந்த போட்டியில் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். அது ஐபிஎல் வரலாற்றில் 7,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 113ஆக உள்ளது. அதேபோல், இவர் ஐபிஎல் தொடரில் 5 சதங்கள் விளாசியுள்ளார். அதேபோல், இதுவரை 7 ஆயிரத்து 43 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி இந்த சாதனையை ஒரே அணிக்காக மட்டுமே விளையாடி படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இவரது ஆவரேஜ் 36.68ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 129.49 ஆகவும் உள்ளது. இவர் இதுவரை 617 பவுண்டரியும், 229 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். பேட்டிங்கில் ரன் மெஷினாக உள்ள விராட் கோலி ஃபீல்டிங்கில் மின்னல் வேகத்தில் செயல்படக்கூடியவர். இவர் இதுவரை 104 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.