TVK Vijay: தவெக-வின் நம்பிக்கையான முதல் தலைமுறை வாக்காளர்கள்! விஜய்க்கு எதிராக திருப்ப ஸ்கெட்ச்?
தவெக-வின் நம்பிக்கையாக உள்ள முதல் தலைமுறை வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க திமுக, அதிமுக ஆகிய முன்னணி கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர்.

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் முக்கியமான மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார்? என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தல் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்படும்.
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விஜய்:
அடுத்தாண்டு நடைபெற உள்ள தேர்தல் இந்த முறை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட உள்ளது. அதற்கு காரணம் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியிருப்பதே ஆகும். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் கடந்தாண்டு அரசியல் கட்சியைத் தொடங்கினாலும், சமீபகாலமாகவே தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
திமுக மற்றும் பா.ஜ.க.விற்கு எதிராகவே தனது அரசியல் இருக்கப்போகிறது என்பதை மிகவும் தெளிவாக விஜய் பதிவு செய்துள்ளார். மத்தியிலும் மாநிலத்திலுமான ஆளுங்கட்சிகளாக திகழும் பா.ஜ.க. மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வந்த விஜய் மற்ற கட்சியினரை வெளிப்படையாகவே கூட்டணிக்கு அழைத்தார். ஆனால், அவருடன் கைகோர்க்க ஒரு கட்சி கூட இதுவரை முன்வரவில்லை. விரைவில் விஜய்யுடன் சில கட்சிகள் கைகோர்க்க வாய்ப்பு உண்டு என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் தலைமுறை வாக்காளர்கள்:
இந்த தேர்தலில் விஜய்யின் மிகப்பெரிய பலமாக மாறியிருப்பது முதல்தலைமுறை வாக்காளர்களே ஆவார்கள். 2கே கிட்ஸ், முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், பல குடும்ப தலைவிகள் ஆதரவு விஜய்க்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. இது மற்ற கட்சியினருக்கு தலைவலியாக மாறியுள்ளது.
தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முன்னணி கட்சியினருக்கு வாக்களித்து வந்தவர்களின் வாக்குகள் அதே கட்சிகளுக்கு கிடைக்கும் என்றாலும், முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் வாக்குகள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக மட்டுமின்றி வாக்கு சதவீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி என்பதால் முன்னணி கட்சிகள் இதில் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
முன்னணி கட்சிகளுக்கு சவால்:
இதனால், முதல் தலைமுறை வாக்காளர்களை கவர்வதற்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் வாக்குகள் பல தொகுதிகளில் வெற்றி வெல்லப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக வரும் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும்.
விஜய்யின் பலமாக கருதப்படும் இந்த முதல் தலைமுறை வாக்காளர்களை எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றப்போகிறார்கள்? என்பதும் திமுக, அதிமுக ஆகிய முன்னணி கட்சிகள் முன் உள்ள சவாலாக மாறியுள்ளது.
வியூகமும், திட்டங்களும்:
மேலும், தவெக-வினரும் திமுக, அதிமுக - பாஜ.க ஆகிய கட்சிகள் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். இதனால், அரசியல் கட்சிகள் முதல் தலைமுறை வாக்காளர்களை கவர்வதற்காக புது வியூகங்களையும், புது திட்டங்களையும் கையில் எடுத்துள்ளனர்.




















