CSK vs MI : முதல் வெற்றியை பெறுமா மும்பை..? மீண்டும் வெற்றிக்கணக்கைத் தொடங்குமா சென்னை..?
MI vs CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்று வரும் 15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், நான்கு முறை மற்றும் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் நிலை என்பது இந்த தொடரில் மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. இரு அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு என்பது இப்போது முதலே கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெற்றிக்கணக்கை தொடங்கவே இல்லை. ஏலத்தில் புதிய வீரர்களை எடுத்த பிறகு இரு அணியிலும் பந்துவீச்சு என்பது மிகவும் கவலைக்குரிய வகையிலே உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில், மும்பை அணியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரு அணிகளும் இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. அதில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 3ல் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2ல் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 10 முறை முதலில் பேட் செய்தும், சென்னை அணி 7 முறையும் முதலில் பேட் செய்து வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 9 முறை இரண்டாவது பேட் செய்தும், சென்னை அணி 6 முறை இரண்டாவது பேட் செய்தும் வெற்றி பெற்றுள்ளன.
தனிநபர் அதிகபட்சமாக மும்பைக்காக ஜெயசூர்யா 114 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 88 ரன்களையும் விளாசியுள்ளனர். ரோகித் சர்மா மும்பைக்காக 693 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 736 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்துள்ளனர். சென்னைக்காக அதிகபட்சமாக ஜடேஜா 18 விக்கெட்டுகளையும், மும்பைக்காக மலிங்கா 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
நடப்பு தொடரில் மும்பை அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே தொடர்ந்து நம்பிக்கை அளித்து வருகிறார். ரோகித்சர்மா தனது பார்முக்கு திரும்பினால் மும்பை அணி ரன்களை குவிக்கும், குயின்டின் டி காக், பொல்லார்ட் போன்றோரும் ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். பந்துவீச்சில் உனத்கட், முருகன் அஸ்வின், மைல்ஸ், பொல்லார்ட் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீச வேண்டியது அவசியம்.
சென்னை அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் ருதுராஜ் பார்முக்கு திரும்பினார். அவர் இந்த போட்டியிலும் தனது பார்மை தொடர வேண்டியது அவசியம். உத்தப்பா, துபே ஜோடி மீண்டும் அதிரடியை காட்ட வேண்டியது அவசியமாக உள்ளது. மொயின் அலி, ராயுடுவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. சென்னையின் பந்துவீச்சும் மும்பையை போலவே கவலை அளிக்கிறது. தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, ப்ரெட்ரியஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஆடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. மும்பை அணி 6 போட்டிகளில் ஆடி 6 போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக இரு அணிகளும் ஆடிய போட்டிகளில் தோல்வியையே பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்