IPL RR vs DC : ராஜஸ்தானை வீழ்த்துமா டெல்லி..? ப்ளே ஆப் வாய்ப்பை பிரகாசப்படுத்தப்போவது யார்?
IPL DC vs RR : டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 58வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி ஆகும். குறிப்பாக டெல்லி அணிக்கு இந்த போட்டி வாழ்வா? சாவா? போட்டி ஆகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை அந்த அணி இந்த தொடர் தொடங்கியது முதல் பலம்மிகுந்த அணியாக விளங்கி வருகிறது. குறிப்பாக, அந்த அணியின் தூணாக பட்லர் விளங்கி வருகிறார். இந்த தொடரில் மட்டும் 3 சதங்கள் விளாசியுள்ள பட்லர் இந்த சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரராக உள்ளார். கடந்த போட்டியில் அசத்திய ஜெய்ஷ்வால் இந்த போட்டியிலும் அசத்த வாய்ப்புள்ளது. படிக்கல் இந்த போட்டியில் தனது பார்முக்கு திரும்புவார் என்று நம்பலாம்.
அதேபோல, மிடில் வரிசையில் ரியான் பராக் நன்றாக ஆடினால் அந்த அணிக்கு பலமாக அமையும். சுழலில் அஸ்வினும், சாஹலும் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றனர். இவர்களை சமாளிப்பது சற்று கடினமாக அமைகிறது. ட்ரெண்ட் போல்டும், பிரசீத் கிருஷ்ணாவும் பந்துவீச்சில் அசத்தினால் ராஜஸ்தானுக்க பலமாக அமையும்.
டெல்லி அணியைப் பொறுத்தவரை இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியல் 5வது இடத்தில் உள்ள டெல்லிக்கு டேவிட் வார்னரும், பிரித்வி ஷாவும் அதிரடி தொடக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம். கேப்டன் ரிஷப் பண்ட் நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடினால் டெல்லி இமாலய இலக்கை குவிக்கும். மிட்ஷெல் மார்ஷ் அதிரடியாக ஆட வேண்டியது கட்டாயம் ஆகும்.
டெல்லி அணிக்கு கடைசி கட்டத்தில் நம்பிக்கையாக உள்ள ரோவ்மென் பாவெல் இந்த போட்டியில் அதிரடி காட்ட வேண்டியது அந்த அணிக்கு அவசியம் ஆகும். ஆல்ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூரும், அக்ஷர் படேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டியது அவசியம். முசிபிஷிர் ரஹ்மான் பந்துவீச்சில் அசத்த வேண்டியது அவசியம்.
புள்ளிப்பட்டியலில் 7 வெற்றிகளுடன் 3வது இடத்தில் உள்ள ராஜஸ்தானும், 5 வெற்றிகளுடன் 5வது இடத்தில் உள்ள டெல்லியும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தங்களது ப்ளே ஆப் வாய்ப்பை இன்னும் பிரகாசமாக்கலாம். இதனால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம். இரு அணிகளுக்கும் இதுவரை நடைபெற்ற போட்டியில் டெல்லி 12 போட்டியிலும், ராஜஸ்தான் 13 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்