IPL 2023: மேட்ச்ல தான் இல்லை; பிட்ச்ல இருக்கேன்; சேப்பாக்கத்துக்கு என்ட்ரி கொடுத்த சின்ன தல..!
IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று அதாவது ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16வது சீசனின் ஆறாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்குகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகளும் மோதும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். கடந்த சீசனில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் மைதானத்தில் சந்திப்பதும் இதுதான் முதல் முறை.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. அந்த போட்டியில் லக்னோ அணி, சென்னை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 210 ரன்கள் குவித்தது. அதனை லக்னோ அணி சேஸ் செய்து வெற்றியும் பெற்றது.
மைதானத்தில் சின்ன தல
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியினைக் காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுரேஷ் ரெய்னா மைதானத்துக்கு வந்துள்ளார். அணியில் இடம்பெறாத அவர், வர்ணனையாளராக வந்துள்ளார். ஆனாலும் அவர் மஞ்சள் நிற உடையில் வந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அவர் கூறியுள்ளதாவது, நான் திரும்பவும் என் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன். இந்த மைதானம் எனது வெற்றி தோல்விகளை பார்த்ததுடன், எனது வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் பார்த்துள்ளது. இங்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stepping into the Chepauk Stadium feels like coming back home. This ground has witnessed my triumphs, my ups and downs, and my lifelong love for the game. Grateful to be back where my heart belongs 💛 #chennai pic.twitter.com/jCipVDPlcH
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 3, 2023
சென்னை அணி முதல் முறையாக சுரெஷ் ரெய்னா இல்லாமல் சென்னையில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் படைக்கவிருக்கும் ரெக்கார்ட்ஸ்:
- சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற 8 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை கடக்க 52 ரன்கள் தேவையாக உள்ளது.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சாளர் அவேஷ் கான் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய 1 விக்கெட் தேவையாக உள்ளது.
- அமித் மிஸ்ரா ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற லசித் மலிங்கா (170), யுஸ்வேந்திர சாஹல் (170) ஆகியோரை முறியடிப்பதற்கு இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.