(Source: ECI/ABP News/ABP Majha)
RR vs MI Innings Highlights: சந்தீப் சர்மா அசத்தல் பந்து வீச்சு: ராஜஸ்தானுக்கு 180 ரன்கள் இலக்கு!
ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை அணி.
ஐ.பி.எல் 2024:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் 38 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன.
அடுத்தடுத்து விக்கெட்:
அந்தவகையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டிய பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களம் இறங்கினார்கள். 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ரோகித் சர்மா 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்த ரசிகர்களை ஏமாற்றினார். ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் முதல் ஓவரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதனிடையே சந்தீப் சர்மா வீசிய இரண்டாவது ஓவர் இஷான் கிஷன் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார். 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டைகளை இழந்து தடுமாறியது மும்பை இந்தியன்ஸ் அணி. அப்போது களம் இறங்கிய சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார் திலக் வர்மா. இவர்களது ஜோடியாவது ஓரளவிற்கு ரன்களை சேர்த்து மும்பை இந்தியன்ஸ் அணியை மீட்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை பறிகொடுத்தார். 8 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் எடுத்தார்.
மும்பையை மீட்ட நேஹால் வதேரா - திலக் வர்மா ஜோடி:
பின்னர் திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்த முகமது நபி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களது ஜோடி மெல்ல மெல்ல ரன்களை சேர்க்க அப்போது யுஷ்வேந்திர சாஹல் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார் முகமது நபி. இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் சாஹல்.
5 விக்கெட் வீழ்த்திய சந்தீப் சர்மா:
இதனிடையே திலக் வர்மாவுடன் ஜோடி அமைத்தார் நேஹால் வதேரா. இவர்களது ஜோடி அதிரடியாக விளையாடியது. இதில் நேஹால் வதேரா 49 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் அரைசதத்தை பதிவு செய்து இருந்தார் திலக் வர்மா. இதன் மூலம் இந்த சீசனில் திலக் வர்மா தன்னுடைய 2 வது அரைசதத்தை பதிவு செய்தார். பின்னர் வந்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதிரடியாக விளையாடி வந்த திலக் வர்மா 45 பந்துகள் களத்தில் நின்று 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 65 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சை பொறுத்தவரை 4 ஓவர்கள் வீசிய சந்திப் சர்மா 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.