"WTC-க்கு செல்ல ரோஹித் சர்மா ஓய்வு கேட்கவில்லை, கேட்டால் பார்க்கலாம்" - MI தலைமைப் பயிற்சியாளர்!
"அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது என்னுடைய முடிவு அல்ல. ரோஹித் விளையாடுவதை விரும்புகிறோம், ஏனென்றால் அவர் ஒரு சிறந்த வீரர், மேலும் ஒரு நல்ல தலைவர், "என்று பவுச்சர் கூறினார்.
ஐபிஎல் தொடர் முடிந்து உடனடியாக இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க இருப்பதால் ரோஹித் ஷர்மா முன்னதாகவே ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு எடுத்து அங்கு செல்ல வேண்டும் என்ற கருத்துக்கள் மேலோங்கிய நிலையில், அதுகுறித்து மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் பேசியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி சொதப்பல்
ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல்-இல் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. ஐந்து முறை கோப்பை வென்றவர்கள் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். இந்நிலையில் லண்டனில் உள்ள ஓவலில் ஜூன் 7-11 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் நோக்கில் ரோஹித் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாகசர் சமீபத்தில் பரிந்துரைத்திருந்தார்.
ஒரே வாரத்தில் WTC இறுதிப்போட்டி
முன்பு ரோஹித் ஷர்மாவும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதாக உறுதிப்படுத்தப்பட்ட அணிகளில் உள்ள WTC வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். ஏனெனில் ஐபிஎல் தொடர் முடிந்து ஒரே வார இடைவெளியில உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி நடைபெற உள்ளதால் வீரர்கள் டெஸ்ட் போட்டி மனப்பான்மைக்கு மாறுவதற்கும், இங்கிலாந்து மைதானங்களுக்கு பழகுவதற்கும் இந்த இடைவெளி போதுமானதாக இருக்காது என்பது பொதுவான கருத்து. ரசிகர்களும் நாட்டுக்காக விளையாடும் கோப்பை முக்கியமா காசுக்காக விளையாடும் ஐபிஎல் முக்கியமா என்ற கேள்விகளை கேட்டு வீரர்களை சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.
பதிலளித்த மும்பை பயிற்சியாளர்
இதுகுறித்த விவாதங்களும் எழத்துவங்கின. அதுகுறித்து பேசிய மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், "இல்லை, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது என்னுடைய முடிவு அல்ல. வெளிப்படையாக, ரோஹித் விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம், ஏனென்றால் அவர் ஒரு சிறந்த வீரர், மேலும் ஒரு நல்ல தலைவர், ”என்று பவுச்சர் இன்று காலை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் இன் 1000வது போட்டிக்கு முன்னதாக ஊடகங்களிடம் கூறினார்.
அவர் கேட்டால் பார்க்கலாம்
"ரோஹித் விரும்பினால், அவர் என்னிடம் வந்து, ஓய்வு தேவை' என்று கேட்டால், அதுகுறித்து சிந்திக்கலாம். அவரே அதைச் செய்யவில்லை. எனவே தற்போதுவரை அவர் விளையாடுவார் என்பதுதான் பதில்,” என்று பவுச்சர் கூறினார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக கடைசி 5 ஓவர்களில் 96 ரன்களை விட்டுக்கொடுத்த மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டிலும் தோல்வியைத் தழுவியதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் டெத் ஓவர் பந்துவீச்சைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று பவுச்சர் ஒப்புக்கொண்டார். இனிவரும் போட்டிகளில் அதனை மாற்றி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வழியை கண்டறிய வேண்டும் என்று குறிப்பிட்டார்.