RCB vs KKR IPL 2023: வெற்றிக்கணக்கை தொடங்குமா கொல்கத்தா?.. பெங்களூரு அணி பீல்டிங்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு - கொல்கத்தா மோதல்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசை தேர்வு செய்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியோ பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியை கண்டது. இதையடுத்து, வெற்றிப்பயணத்தை தொடர பெங்களூரு அணியும், புள்ளிக்கணக்கை தொடங்க கொல்கத்தா அணியும் முனைப்பு காட்டி வருகின்றன. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணி நிலவரம்:
மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த கோலி மற்றும் டூப்ளெசிஸ் ஆகியோர் பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். இந்த போட்டியிலும் அவர்களது ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை தொடர்ந்து களமிறங்கும் கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அதிரடி ஆட்டத்திற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. க்டந்த போட்டியில் கயமடைந்த டாப்லி இன்றைய போட்டியில் விளையாடாதது பெங்களூரு அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழலில் கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய கரண் ஷர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் அகியோர் இன்றைய போட்டியில் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
கொல்கத்தா அணி நிலவரம்:
கொல்கத்தா அணியோ கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் விளையாடாததால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் தவித்து வருகிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மழை குறுக்கிட்டதால், டக்வர்த் லூயிஸ் முறைப்படி தோல்வியை சந்தித்தது. கொல்கத்தாவின் பேட்டிங் ஆர்டர் ரஹ்மானுல்லா குர்பாஸ், மன்தீப் சிங், நிதிஷ் ராணா, ரின்கு சிங் ஆகிய இளம் வீரர்களையே நம்பியுள்ளது. பந்துவீச்சை பொருத்தவரையில் ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளனர். உள்ளூர் மைதானமான ஈடன் கார்டனில் போட்டி நடைபெறுவது, கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் கடந்த 15 சீசன்களாக விளையாடி வரும் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 16 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
சாதனை படைப்பரா கோலி?
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் களமிறங்குவது பெங்களூரு அணிக்காக கோலி விளையாடும் 225வது போட்டியாகும், ஈடர் கார்டன் மைதானத்தில் இதுவரை 471 ரன்களை எடுத்துள்ள கோலிக்கு, 500 ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 29 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் 92 ரன்களை சேர்த்தால் டி-20 போட்டிகளில் 11,500 ரன்களை பூர்த்தி செய்வார்.