(Source: ECI/ABP News/ABP Majha)
PBKS vs DC IPL 2023: பஞ்சாப்பின் ப்ளேஆஃப் கனவை தட்டிப்பறிக்குமா டெல்லி? டாஸ் வென்று பந்து வீச முடிவு..!
PBKS vs DC IPL 2023: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
PBKS vs DC IPL 2023: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வருகிறது. ஆனாலும், இதுவரை ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிகள் மட்டுமே ஓரளவிற்கு வலுவாக முதல் இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லியை தவிர மற்ற 7 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
பஞ்சாப் - டெல்லி மோதல்:
இந்த சூழலில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ள, 59வது லீக் போட்டியில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடலஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை முற்றிலும் இழந்துள்ள டெல்லி அணிக்கு இந்த போட்டி புள்ளிப்பட்டியலில் தங்களை நல்ல நிலைக்கு முன்னேற்ற உதவும். ஆனால் பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பஞ்சாப் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க முடியும்.
பஞ்சாப் அணி நிலவரம்:
நடப்பு தொடரை அடுத்தடுத்து வெற்றிகளால் தொடங்கினாலும், கடந்த சில போட்டிகளாக பஞ்சாப் அணி பெரிதாக சோபிக்கவில்லை. வெற்றி, தோல்வி என மாறி மாறி முடிவுகளை பெற்று வருகிறது. கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் பஞ்சாப் அணி 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால், 10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே இந்த அணி, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்த சூழலில் இன்றை போட்டியில் வென்று பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைக்க பஞ்சாப் அணி முனைப்பு காட்டி வருகிறது.
டெல்லி அணி நிலவரம்:
வார்னர் தலைமையிலான டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டும் வென்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் மூலம், நடப்பு தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. அதேநேரம், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றி டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால், பார்ட்டி ஸ்பாய்லர் என குறிப்பிடும் வகையில், கடைசி நேரதில் பல அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பை டெல்லி அணி பறிக்கக்கூடும் என கருதப்படுகிறது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் கொல்கத்தா அணியிடம் டெல்லி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.