Kieron Pollard: விஸ்வாசம் குறித்து பதிவிட்ட பொல்லார்ட் - ரோகித் சர்மாவுக்காக மீண்டும் இணையத்தை ஆக்கிரமிக்கும் ரசிகர்கள்
Kieron Pollard: மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான பொல்லார்டின் இன்ஸ்டாகிராம் பதிவு புகைச்சலை கிளப்பியுள்ளது.
முன்னாள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) கிரிக்கெட் வீரர் கெய்ரோன் பொல்லார்ட் சமீபத்தில் தனது சமூகவலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் விஸ்வாசம் குறித்து ஒரு பதிவினை ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இது தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராமில், ” மழை நின்றதும், குடை அனைவருக்கும் ஒரு சுமையாக மாறும். நன்மைகள் முழுவதையும் அனுபவித்த பின்னர் விஸ்வாசத்தை எதிர்பார்க்க முடியாது" என பகிர்ந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ள பொல்லார்ட் இந்தியன் பிரிமியர் லீக்கில் அவர் அறிமுகமான 2010ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்-லில் இருந்து அவர் ஓய்வு பெற்ற கடந்த 2022ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் விளையாடினார். கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு அணியினை தயார் செய்து வருகின்றார்.
இன்ஸ்டாகிராமில் பொல்லார்டின் பதிவானது தற்போது இணையத்தில் பெறும் வைரலாகி வருகின்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக நடைபெற்ற அணிகளுக்கு இடையிலான ட்ரேடிங்கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கியது. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் குஜராத் டைட்டன்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது மட்டும் இல்லாமல், அறிமுக தொடரிலேயே கோப்பையை வென்றும் அசத்தினார். இவர் இதற்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் அசைக்க முடியாத ஆல் - ரவுண்டராக இருந்தார்.
ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ட்ரேட் செய்தது அணியில் இருந்த பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு பிடிக்கவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவின் சமூகவலைதளப் பதிவுகளும் அமைந்தது. இவர்களின் சமூகவலைதளப் பதிவுகளால் ஏற்பட்ட சலசலப்பு முடிவதற்குள் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் இந்த செயல் மும்பை அணிக்கு மட்டும் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை சமூகவலைதளங்களில் பின் தொடர்வதை ரத்து செய்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். பலர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியை எரித்து அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தனர்.
இந்த சலசலப்புகள் எல்லாம் ஓய்ந்த பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான பொல்லார்டின் இன்ஸ்டாகிராம் பதிவு மேலும் புகைச்சலை கிளப்பியுள்ளது. இதனை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களும் ரோகித் சர்மாவின் ரசிகர்களும், பொல்லார்ட் மும்பை அணி ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து விலக்கியதை குறிப்பிட்டுத்தான் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என சமூகவலைதளங்களில் உரையாடி வருகின்றனர்.