IPL Points Table: புள்ளிப்பட்டியலில் கிடுகிடுவென முன்னேறிய லக்னோ..! நம்ம சென்னை என்ன இடம்..?
இந்த வெற்றியின் மூலம் எல்எஸ்ஜி லீக் அட்டவணையில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.
மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் அடித்த அடியில் பந்துகள் நாலாப்புறமும் சிதற லக்னோ அணியின் ஸ்கோர் இமாலய உயரத்தை எட்டியது. 8வது ஓவரில் 100, 16வது ஓவரில் 200 என்று ஆரம்பத்தில் இருந்தே ரன்ரேட்டை கொஞ்சமும் குறைய விடாமல், இந்திவ் பவுலரையும் விட்டு வைக்காமல் தாக்கினர் லக்னோ அணியினர். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை 250 ஐக் கடந்து 257இல் சென்று மெஷின் நின்றது.
கொஞ்ச நேரத்தில் ஆர்சிபி அணியின் சாதனை ஸ்கொரான 263க்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தை காட்டிவிட்டனர் லக்னோ அணியினர். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரைக் குவித்த பின்னர், இந்த ஹை ஸ்கோரிங் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
காட்டுத்தனமாக அடித்த லக்னோ
இந்த போட்டியில் அதிரடி காண்பித்த கைல் மேயர்ஸ் (24 பந்துகளில் 54) மற்றும் ஸ்டோனிஸ் (40 பந்துகளில் 72) ஆகியோரின் மிருகத்தனமான தாக்குதலால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களைத் தொட முடிந்தது. இடையில் ஆயுஷ் பதோனியும் தன் பங்குக்கு அதிரடி காண்பித்து செல்ல, பூரான் மளமளவென 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்துவிட்டு துரதிர்ஷ்டவசமான முறையில் ஆட்டமிழந்தார். கேட்சிற்காக எடுக்கப்பட்ட டிஆர்எஸ்-இல் பந்து பேட்டில் படவில்லை என்பது தெரிய வர, நேராக பேடில் உரசிச்சென்றது. உடனே டிவி அம்பயர் பால் டராக்கிங் செய்ய பந்து ஸ்டம்பை அடிப்பது தெரிந்து அவுட் ஆனார்.
அதிரடி காட்டியும் தோற்ற பஞ்சாப் அணி
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. பொதுவாக பார்க்க ஒரு சிறந்த ஸ்கோராகவே தெரியும் இந்த எண்ணிக்கை, லக்னோ அணியின் இமாலய ஸ்கோரை எட்ட உதவவில்லை. முடிந்த அளவு பஞ்சாப் அணியும் அதிரடி காட்டினாலும், ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தேவையான ரன் விகிதம் 13 இல் இருந்ததால் இலக்கை எட்ட முடியாமல் போனது. பஞ்சாப் அணி சார்பில் அதர்வா டைடே 33 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அவர்கள் அணியின் முக்கிய வீரர்கள் ரன் குவிக்க தவறிய நிலையில், லிவிங்ஸ்டன் (22 பந்தில் 36) சிக்கந்தர் ராசா (14 பந்தில் 23) போன்றவர்கள் கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய ஸ்கோராக மாற்ற தவறினர். இளம் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் 4 ஓவர்களில் 4/37 என்ற எண்ணிக்கையில் பந்து வீசி அசத்தினார்.
புள்ளிப்பட்டியல் மாற்றம்
எட்டு ஆட்டங்களில் LSG இன் ஐந்தாவது வெற்றி இது, பஞ்சாப் கிங்ஸ் எட்டு ஆட்டங்களில் நான்காவது தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் எல்எஸ்ஜி லீக் அட்டவணையில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. எட்டு போட்டிகளில் 10 புள்ளிகளைப் பெற்ற நான்காவது அணி மற்றும் நிகர ரன் ரேட் 0.841. வைத்துள்ளது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் மட்டும் அதில் 7 ஆட்டம் மட்டுமே ஆடியுள்ளது. இன்று மதியம் கொல்கத்தா அணியை சந்திக்கும் அவர்கள் வென்றால் 12 புள்ளிகளுடன் நேராக முதலிடத்திற்கு செல்வார்கள். மற்ற மூன்று அணிகளுடன் 10 புள்ளிகளுடன் பின்தங்குவார்கள்.
ஆரஞ்சு கேப் & பர்பில் கேப்
ஆரஞ்சு கேப் அட்டவணையில் முதல் ஐந்து இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. கைல் மேயர்ஸ் 8 போட்டிகளில் 160.54 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 37.13 சராசரியுடன் 297 ரன்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 8 போட்டிகளில் 167.46 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 60.29 சராசரியுடன் 422 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை வைத்துள்ளார்.
சக வீரர் விராட் கோலி 333 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸின் டெவோன் கான்வே 322 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். கான்வேயின் சக வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 317 ரன்களுடன் நான்காவது இடத்திலும், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் 306 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். அதே போல பர்பில் கேப்பிலும் பெரிய மாற்றங்கள் இல்லை, முதல் மூன்று இடங்களை முறையே முகமது சிராஜ், ரஷீத் கான், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் பிடித்துள்ளார், மூவருமே 14 விக்கெட்டுகள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.