RCB: பாதுகாக்கப்படும் ஹேசில்வுட்.. களத்தில் இறக்கப்பட்ட துஷாரா! ஆர்சிபி-யை காப்பாற்றுவாரா?
ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு முக்கியமான போட்டியில் ஹேசில்வுட்டிற்கு பதிலாக நுவன் துஷாரா களமிறங்கியுள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இன்று லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் ஆர்சிபி அணி இன்று ஆடுகிறது. ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே ஆர்சிபி அணி உறுதி செய்துவிட்டாலும் குவாலிஃபயர் போட்டியில் ஆடப்போகிறார்களா? அல்லது எலிமினேட்டர் போட்டியில் ஆடப்போகிறார்களா? என்பதை தீர்மானிக்கும் முக்கிமான போட்டி இந்த போட்டி ஆகும்.
காயத்தில் ஆர்சிபியின் நட்சத்திரங்கள்:
கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் காயத்தில் சிக்கியிருப்பது பிரச்சினையை உண்டாக்கியுள்ளது. டிம் டேவிட், ஹேசில்வுட், ரஜத் படிதார் ஆகியோர் சிக்கியுள்ளனர்.
ரஜத் படிதார் கடந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய நிலையில் இன்றைய போட்டியிலும் இம்பேக்ட் வீரராகவே களமிறங்குகிறார். கடந்த போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணி 235 ரன்களை விளாசியது. அதற்கு முக்கிய காரணம் ஆர்சிபி-யின் பந்துவீச்சு பலவீனமாக இருந்ததே ஆகும், புவனேஷ்வர், யஷ் தயாள், நிகிடி, குருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா இருந்தாலும் அவர்களால் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆர்சிபியின் முக்கிய வீரரான ஹேசில்வுட் இல்லாதது அவர்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
பாதுகாக்கப்படும் ஹேசில்வுட்:
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து ஹேசில்வுட் திரும்பியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ப்ளே ஆஃப் போட்டியை மனதில் கொண்டு அவர் களமிறக்கப்படவில்லை. மேலும், ஆர்சிபி அணியை இந்த சீசனில் பல நெருக்கடியான சமயத்தில் கரை சேர்த்த டிம் டேவிட் கடந்த போட்டியில் காயத்தில் சிக்கினார். இதனால், இன்றைய போட்டியில் அவர் களமிறக்கப்படவில்லை.
துவம்சம் செய்வாரா துஷாரா?
ஆர்சிபியின் தூண்களான இருவரும் களமிறங்காத நிலையில், ஹேசில்வுட்டிற்கு பதிலாக இலங்கையின் நுவன் துஷாரா களமிறங்கியுள்ளார். இவர் மலிங்காவைப் போல பந்துவீசும் திறன் கொண்டவர். இவர் இன்றைய போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்படுகிறது. அதேபோல, நீண்ட இடைவெளிக்கு பிறகு லிவிங்ஸ்டன் ப்ளேயிங் லெவனில் களமிறங்கியுள்ளார்.
புவனேஷ்வர் கம்பேக் தருவாரா?
மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடும் திறன் கொண்ட லிவிங்ஸ்டன் மீண்டும் தன்னை நிரூபிக்க இந்த போட்டி மிகவும் உகந்ததாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. மேலும், தொடர்ந்து பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாக புவனேஷ்வர் மீண்டும் ஃபார்முக்கு வந்தால் நிச்சயம் ஆர்சிபிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.
இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி குவாலிஃபயர் போட்டியில் ஆடுவதே அந்த அணிக்கு நம்பிக்கையையும், பலத்தையும் அளிக்கும். இதனால், இவர்கள் இந்த போட்டியில் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தவே ஆர்வம் காட்டுவார்கள்.




















