(Source: ECI/ABP News/ABP Majha)
’அவங்களுக்கு மொக்க கொடுத்தது நல்லா இருந்துச்சு..’ சென்னை தோல்விக்கு பின் ஜாலியாக பேசிய வருண் சக்கரவர்த்தி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்கரவர்த்தி ஜாலியாக பேசியிருந்தார்.
ஐபிஎல் தொடரின் நேற்று முன்தினம் நடந்த 61வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிகொண்டது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய டேவான் கான்வே 30 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களும் எடுத்து வெளியேற, அடுத்து வந்த மிடில் ஆர்டர் பேஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன்மூலம் சென்னை அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களுடன் தடுமாறியது.
அதன்பிறகு, ஷிவம் துபே மற்றும் ஜடேஜா ஓரளவு தாக்குபிடித்து ரன்களை குவிக்க, 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணி சார்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய தொடங்கியது. அதன்பிறகு கூட்டணி அமைத்து கேப்டன் ராணா மற்றும் ரிங்கு சிங்கின் அதிரடி அரைசதம் அடித்து அசத்தினர். போட்டியின் 18வது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ரிங்கு சிங் ரன் அவுட் மூலம் தனது விக்கெட்டை இழந்தார். கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்கரவர்த்தி ஜாலியாக பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், “என் குடும்பத்தில் இருந்து 20 பேர் மேட்ச் பார்க்க வந்திருந்தார்கள். ஒருத்தரும் நான் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், எனக்கும் சப்போர்ட் செய்யவில்லை. எல்லாரும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்குதான் சப்போர்ட் செய்தார்கள். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றிபெற்று அவர்களுக்கு மொக்கை கொடுத்தது நன்றாக இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.