KKR vs SRH IPL 2023: கொல்கத்தா - ஹைதராபாத் மோதல்..! கலக்கப்போகும் தமிழர்கள் யார்? யார்..?
கொல்கத்தா - ஹைதரபாத் அணிகள் மோதும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின் தாக்கம் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஐ.பி.எல். 16வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொடரை பொறுத்தவரையில் ஹைதரபாத் அணியுடன் ஒப்பிடும்போது கொல்கத்தா அணி மிகுந்த பலமிகுந்த அணியாக உள்ளது.
இத்தனை கால ஐ.பி.எல். சீசன்களை காட்டிலும் நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிகளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான அணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் களமிறங்கி வருகின்றனர். இன்று ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இரு அணியிலும் முக்கிய வீரர்களாக உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
கொல்கத்தா அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெகதீசன், வருண் சக்கரவர்த்தி உள்ளனர். சுழல்பந்தவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கொல்கத்தா அணியின் முக்கிய சுழல் பந்துவீச்சாளராக உள்ளார். சுனில்நரேனுடன் இணைந்து சுழலில் எதிரணியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். வருண் சக்கரவர்த்தி இதுவரை 45 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட என்.ஜெகதீசன் தமிழ்நாடு அணிக்காக இதுவரை ஏராளமான போட்டிகளில் ஆடி சதங்களையும், அரைசதங்களையும் விளாசியுள்ளார். சென்னை அணிக்காக ஆடிய இவர் தற்போது கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் இதுவரை முறையாக வாய்ப்புகள் வழங்கப்படாத ஜெகதீசன் தற்போது கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார். 28 வயதான ஜெகதீசன் இதுவரை 8 ஐ.பி.எல். போட்டிகளில் 5 இன்னிங்ஸில் மட்டுமே ஆடியுள்ளார். இவர் 79 ரன்கள் எடுத்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதரபாத்:
ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் முக்கிய வீரர்களாக உலா வருவபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜனும், வாஷிங்டன்சுந்தரும் ஆவார்கள். சாதாரண நெட் பவுலராக அணிக்குள் நுழைந்து தன்னுடைய அபார திறமையால் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளராக அறிமுகமாகி முதன்மை பந்துவீச்சாளராக வளர்ந்ததுடன், இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தினார். தன்னுடைய அசராத வேகம் மற்றும் யார்க்கர் பந்துவீச்சு மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து வருபவர். 33 வயதான நடராஜன் இதுவரை 38 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
சன்ரைஸர்ஸ் அணியின் பிரதான ஆல்ரவுண்டராக இருப்பவர் வாஷிங்டன் சுந்தர். சுழலில் மட்டுமின்றி நெருக்கடியான நேரத்தில் பேட் செய்து பேட்டிங்கிலும் அசத்துபவர் வாஷிங்டன் சுந்தர். ஐ.பி.எல். தொடரில் நன்றாக ஆடிய அனுபவம் கொண்டவர். 24 வயதே ஆன வாஷிங்டன் சுந்தர் 54 ஐ.பி,எல், போட்டிகளில் ஆடி 335 ரன்களும், 33 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும் படிக்க: ABP Nadu Anniversary: சிறப்புமிக்க 3-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஏபிபி நாடு.. வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்
மேலும் படிக்க: Hardik Pandya Fined: பாண்ட்யாவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம்...! நடப்பு ஐ.பி.எல்.லில் 3வது கேப்டன்..! என்னதான் காரணம்..?