Hardik Pandya Fined: பாண்ட்யாவிற்கு ரூ. 12 லட்சம் அபராதம்...! நடப்பு ஐ.பி.எல்.லில் 3வது கேப்டன்..! என்னதான் காரணம்..?
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக ஹர்திக் பாண்ட்யாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று மொகாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் – குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரூபாய் 12 லட்சம் அபராதம்:
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு எதிராக குஜராத் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்ற காரணத்திற்காக, அதாவது மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணி கேப்டன் பாண்ட்யாவிற்கு மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். அதேசமயம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் மெதுவாக பந்துவீசிய குற்றச்சாட்டிற்காக ஒரு அணியின் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது 3வது முறை ஆகும். இதற்கு முன்பு பெங்களூர் கேப்டன் பாப் டுப்ளிசிஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பந்துவீசாத பாண்ட்யா:
நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி கட்டுக்கோப்பாக பந்துவீசினாலும் சற்று கூடுதல் நேரத்தை பந்துவீச எடுத்துக்கொண்டனர். குஜராத் அணியில் முகமது ஷமி, ஜோஸ்வா லிட்டிங், அல்ஜாரி ஜோசப், ரஷீத்கான் மற்றும் மோகித்ஷர்மா பந்துவீசினர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா நேற்று பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொகாலியின் ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக மேத்யூ ஷார்ட் 36 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாரூக்கான் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 9 பந்துகளில் 22 ரன்கள் விளாசியதால் பஞ்சாப் அணி 153 ரன்களை எட்டியது. மோகித்ஷர்மா குஜராத் அணிக்காக சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
தொடர்ந்து 154 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹா அதிரடி தொடக்கம் அளித்தார். அவர் 30 ரன்களில் அவுட்டானாலும் சுப்மன்கில் அதிரடியாக ஆடினார். சுப்மன்கில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் 1 பந்து மீதம் வைத்து குஜராத் அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களை எட்டியது.
மேலும் படிக்க: KKR vs SRH IPL 2023: கொல்கத்தாவிடம் அடி வாங்கிய ஐதராபாத்.. பழிதீர்க்குமா மார்க்ரம் படை?
மேலும் படிக்க: ABP Nadu Anniversary: சிறப்புமிக்க 3-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் ஏபிபி நாடு.. வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்