KKR vs DC Match Highlights: பிலிப் சால்ட் அதிரடி..7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 29) விளையாடின. கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா – ஜேக் ப்ரெசர் மெக்கர்க் ஆகியோர் களமிறங்கினர். வழக்கம்போல இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். பவுண்டரிகளாக விளாசிய பிரித்வி ஷா 13 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கடந்த போட்டியில் விளாசிய ஜேக் ப்ரெசர் 12 ரன்களில் அவுட்டானார்.
அடுத்த சில நிமிடங்களில் ஷாய் ஹோப் 6 ரன்னில் அவுட்டாக, அபிஷேக் போரல் – ரிஷப் பண்ட் சிறிது நேரம் நின்று ஆடினர். நிதானமாக ஆடிய அபிஷேக் போரல் 15 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு அவுட்டாக, மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆனால், அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. அவர் 27 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் நிதானம் காட்டிய அக்ஷர் படேல் 15 ரன்களுக்கு அவுட்டாக, அதிரடி வீரர் ஸ்டப்ஸ் 4 ரன்னில் அவுட்டானார்.
111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த டெல்லி அணிக்கு குல்தீப் யாதவ் கடைசி கட்டத்தில் கைகொடுத்தார். அவரது பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி டெல்லி அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார். குல்தீப் கடைசி கட்ட அதிரடியால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தனர்.
அதிரடியாக அரைசதம் விளாசிய பிலிப் சால்ட்:
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினார்கள். இதில் அதிரயான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் பிலிப் சால்ட். 79 ரன்கள் வரை இவர்களது ஜோடி விளையாடியது. அப்போது சுனில் நரைன் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 15 ரன்கள் எடுத்தார்.
டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா:
மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த பிலிப் சால்ட் விக்கெட்டானார். மொத்தம் 33 பந்துகள் களத்தில் நின்ற அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் விளாசி 68 ரன்களை குவித்தார். பின்னர் ரிங்கு சிங் களம் இறங்கினார். 11 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இவர்களது ஜோடி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றது. 16.3 ஓவர்களில் கொல்கத்தா அணி 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.