Jadeja - Dhoni Issue: ஜடேஜா - தோனி இடையே சண்டையா..? ஜட்டு ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் குழப்பம்..!
ஜடேஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி உடன் ஏதோ பிரச்னை உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஜடேஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி உடன் ஏதோ மனக்கசப்பு உள்ளதோ? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
வைரலான வீடியோ:
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, 12வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேநேரம், அந்த போட்டியின் முடிவில் தோனி - ஜடேஜா இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
சீரியசாக பேசிய தோனி:
அந்த வீடியோவில், போட்டியில் வென்ற மகிழ்ச்சி இல்லாமல் மிகவும் சீரியசாக தோனி பேச அதற்கு ஜடேஜாவும் சீரியசாக பதில் சொல்ல, இந்த உரையாடல் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் கிளம்பியது. அவர்கள் என்ன பேசினார்கள்? என்பது தெரியாவிட்டாலும், ஜடேஜா முகத்தில் ஏதோ ஒரு ஏமாற்றமும் கோவமும் தெரிந்தது. தோனியும் கடுமையாக எதையோ பேசியதை உணர முடிந்தது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் மற்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீசினாலும், ஜடேஜா மட்டும் தனது 4 ஓவர்களில் 50 ரன்களை வாரிக்கொடுத்தார். ஒருவேளை தோனி இதுகுறித்து தான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பாரோ? என சில விவாதங்கள் ஏற்பட்டன.
ஜடேஜாவின் பதிவு:
இந்நிலையில் தான், ஜடேஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில், ”செய்த காரியங்களுக்கான பலன்கள் உன்னை வந்து சேரும். விரைவாகவோ அல்லது தாமதமாகவோ, ஆனால் நிச்சயம் அது உன்னை அடையும்” என குறிப்பிட்டுள்ளார். ஜடேஜாவின் இந்த பதிவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
காரணம் என்ன?
தோனி பேசிய விதம் மற்றும் தன்னை அணுகிய விதம் குறித்து அவர் இவ்வாறு ஒரு பதிவை வெளியிட்டு இருப்பாரோ என பேசப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, தொடர் தோல்விகள் காரணமாக பாதி தொடரிலேயே அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார்.
இதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, ஜடேஜா சென்னை அணியில் இருந்து விலகுவார் என சில தகவல்கள் வெளியாகின. ஆனாலும், தோனி நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக, சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாட சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில் தான், தோனி மற்றும் ஜடேஜா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
ரசிகர்கள் எதிர்ப்பு:
இதனிடையே, நடப்பு தொடரில் சுமாரான ஆட்டத்தையே ஜடேஜா வெளிப்படுதினாலும், 3 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். ஆனாலும், தோனியை மைதானத்தில் காண்பதற்காக, அவருக்கு முன்பாக களமிறங்கும் ஜடேஜாவை 'அவுட் ஆகுங்கள்.. அவுட் ஆகுங்கள்' என ரசிகர்கள் முழக்கங்களை ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இதுதொடர்பாக ஜடேஜாவே வெளிப்படையாக சில இடங்களில் பேசியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன-அழுத்தம் காரணமாகவும் ஜடேஜா இந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.