AB De Villiers: கிரிக்கெட் அணியில் இனப்பிரிவினை விவாதிப்பது வெட்கக்கேடு - டிவில்லியர்ஸ் ஆவேசம்!
T20 World Cup: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 2 முதல் 29 வரை டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.
இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை குறித்த பேச்சுகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. ஐசிசி டி20 உலகக் கோப்பையை இம்முறை அமெரிக்காவும் வெஸ்ட் இண்டீஸும் இணைந்து நடத்துகின்றது. மொத்தம் 20 நாடுகள் களமிறங்கியுள்ள இந்த உலகக்கோப்பை யுத்தத்தில் எந்த அணி மகுடம் சூடும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.
உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
அதாவது, வழக்கமாக ஐசிசி தொடர்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்படுகின்றது என்றால் தென்னாப்பிரிக்காவைப் பற்றி தெரிந்தவர்கள், அதில் கவனம் செலுத்துவது தென்னாப்பிரிக்கா அணியில் எத்தனை கருப்பின வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பதைத்தான்.
2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்காவின் அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து, அணியில் கருப்பின வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்துதான். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ்,இது தொடர்பாக நடந்த உரையாடல் இன ஒதுக்கீட்டில் கவனம் செலுத்தியதில் ஆச்சரியமில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் அது வெட்கக்கேடானது. ஐசிசி தொடர்களில் அணி அறிவிக்கப்படும்போது இதுபோன்ற விவாதங்கள் வருவதை நான் அறுவருப்பாக கருதுகின்றேன் என ஜியோ சினிமாவில் நடைபெற்ற ஒரு உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்குப் பின்னர் தென்னப்பிரிக்கா அணியின் அதிகப்படியான வெள்ளை நிற வீரர்கள் இருப்பது இதுவே முதல் முறை. 2016 ஆம் ஆண்டில், டி வில்லியர்ஸ் அணியில் இருந்தபோது, கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) இனப் பிரதிநிதித்துவத்திற்கான முறையான கணக்கீட்டினை அறிவித்தது. அதன்படி 11 பேர் கொண்ட அணியில் குறைந்தபட்சம் இரண்டு கறுப்பின ஆபிரிக்கர்களுடன் அதிகபட்சமாக ஐந்து வெள்ளை வீரர்களை சேர்க்கலாம் என்று விதிகள் வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தென்னாப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ராப் வால்டரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, வெற்றிபெறும் தென்னாப்பிரிக்கா அணியை உருவாக்குவதே எனது முதல் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 2 முதல் 29 வரை நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணியில் ஒன்பது வெள்ளை வீரர்கள், ஒரு கறுப்பின ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் ஐந்து கலப்பு இனம் அல்லது ஆசிய வம்சாவளி வீரர்கள் உள்ளனர். மற்றொரு கறுப்பின வீரர், லுங்கி என்கிடி, காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் உள்ளார்.
ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி ஜூன் 8 ஆம் தேதி நியூயார்க்கில் நெதர்லாந்திற்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது.