வெளியேறுகிறாரா கேன் வில்லியம்சன்? ஃபீல்டிங்கின்போது முழங்கால் காயம்… பயிற்சியாளர் தந்த அப்டேட்!
அவர் கைப்பட்ட பந்து தரையில் பிட்ச் ஆகி பவுண்டரி லைனை தொட்டது. ஆனால் அந்த நேரத்தில் வில்லியம்சன் தனது வலது முழங்காலைப் பிடித்தபடி தரையில் வலியுடன் முனகிக்கொண்டிருந்தர்.
கேன் வில்லியம்சன் முதல் ஐபிஎல் 2023 போட்டியின்போது ஃபீல்டிங் செய்யும்போது அற்புதமாக ஜம்ப் செய்து ஒரு சிக்ஸரை கேட்ச் பிடித்து வெளியில் வீச முயன்றபோது கீழே விழுந்ததில் முழங்காலில் காயமான நிலையில் அவரது உடல்நிலை எப்படி உள்ளது தொடரில் தொடருவாரா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
அறிமுக போட்டியிலேயே காயம்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அறிமுகமாகும் அவர், போட்டியில் 13 ஓவர்களில் களத்தில் இருந்து காயம் காரணமாக வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் களம் இறங்கினார். அவர் டீப்-ஸ்கொயர் லெக் எல்லையில் பீல்டிங் செய்யும் போது இந்த சம்பவம் நடந்தது. ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸருக்கு விரட்டிய பந்தை இடைமறிக்க சரியான நேரத்தில் கச்சிதமாக தாவிய அவர், கச்சிதமாக தரையிறங்க தவறிவிட்டார். ஆனால் அதன் மூலம் சிக்ஸரை தடுத்த அவர் 2 ரன்களை பாதுகாத்தார். அவர் கைப்பட்ட பந்து தரையில் பிட்ச் ஆகி பவுண்டரி லைனை தொட்டது. ஆனால் அந்த நேரத்தில் வில்லியம்சன் தனது வலது முழங்காலைப் பிடித்தபடி தரையில் வலியுடன் முனகிக்கொண்டிருந்தர்.
காற்றில் பறந்து பிடித்த கேட்ச்
அவர் வலது கால் தரையில் வேகமாக விழுந்து, முழு உடல் எடையும் அதில் கொடுத்ததால் கடுமையான வலியை உண்டு செய்துள்ளது. சில நிமிடங்கள் சிகிச்சை பெற்றும், வலியை தங்க முடியாத அவரை உள்ளே அனுப்பிவிட்டு குஜராத் அணி, சாய் சுதர்சனை மாற்று பீல்டராகக் கொண்டு வந்தது. பின்னர் இருவரையும் XI இல் இம்பாக்ட் பிளேயர் விதி மூலம் மாற்றி அவருக்கு பதிலாக பேட்டிங் செய்ய வைத்தது. வில்லியம்சன் அந்த கேட்சை நிறைவு செய்திருந்தால், அது ஒட்டுமொத்த சீசனிலும் மிக முக்கியமான ஒரு அற்புதமான கேட்ச்சாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் கெய்க்வாட் 36 பந்தில் 71 ரன்களில் இருந்தார். பின்னர் கெய்க்வாட் 50 பந்தில் 92 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பையில் இருந்தும் வெளியேற்றமா?
இந்த நிலையில் இதுகுறித்து ஸ்போர்ட்ஸ் டாக் வெளியிட்டுள்ள செய்தியின் படி, கேன் வில்லியம்சன் ஐபிஎல்-ஐ விட்டு வெளியேறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. யூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், வில்லியம்சனின் காயம் அணிக்கு ஒரு பெரிய அடியாகும், மேலும் காயத்தின் தீவிரம், ஐபிஎல் மற்றும், அக்டோபரில் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையில் அவரது பங்கேற்பைப் பாதிக்குமா என்பது பற்றி மிக விரைவில் தகவல் கிடைக்கும் என்று கூறினார், "நேற்று இரவு கேன் [வில்லியம்சன்] ஐபிஎல் முதல் ஆட்டத்திலேயே காயம் அடைந்தார். காயத்தின் தீவிரம் பற்றி இந்த கட்டத்தில் எங்களுக்குத் தெரியவில்லை. அடுத்த 24-48 மணி நேரத்தில் அவர் மதிப்பீடு செய்யப்படுவார். எனவே அதன் பிறகுதான் மேலும் தகவல்கள் தெரியவரும். இந்த கட்டத்தில் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது வலது முழங்கால் காயம் மட்டுமே", என்றார்.
Kane Williamson ruled out of IPL 2023. (Source - Sports Tak)
— Johns. (@CricCrazyJohns) April 1, 2023
மோசமான காலத்தில் வில்லியம்சன்
ஐபிஎல் 2023 சீசனின் தொடக்க ஆட்டத்தில் டைட்டன்ஸ் அணிக்காக வில்லியம்சனின் முதல் ஆட்டமான இது, அவர் ஆடிய எட்டு சீசன்களில் அவரது முதல் புதிய ஐபிஎல் அணிகாக விளையாடும் ஆட்டம் ஆகும். அவர் 2015 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்துள்ளார். மேலும் 2018 மற்றும் 2022 இல் முழுமையாகவும், 2019 மற்றும் 2021 இல் பாதி வரை கேப்டனாகவும் இருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக அவரைத் துன்புறுத்திய நீண்ட கால முழங்கை காயத்தில் இருந்து அவர் சமீபத்தில்தான் முழுமையாக குணமடைந்தார். 13 இன்னிங்ஸ்களில் வெறும் 216 ரன்களை எடுத்த அவர், 2022ல் மோசமான ஐபிஎல்லை ஆடினார். கடந்த டிசம்பரில், அவர் நியூசிலாந்து கேப்டன் பதவியை கைவிட்ட நிலையில், மேலும் மீண்டும் ஒருமுறை த்ரில்லான டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்ததன் மூலம், மீண்டும் சிறந்த ஃபார்மில் இருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.