IPL Final 2024: அதிக விலைக்கு ஏலம்போன இருவர்; நேருக்கு நேர் மோதும் ஸ்டார்க் - கம்மின்ஸ்! அசத்தப்போவது யார்?
நடப்பு ஐ.பி.எல். தொடரில் அதிக தொகைக்கு ஏலம்போன மிட்செல் ஸ்டார்க் - பாட் கம்மின்ஸ் இருவரும் இறுதிப்போட்டியில் நாளை நேருக்கு நேர் மோதிக் கொள்ள இருப்பது விறுவிறுப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. குவாலிபயர் 1 சுற்றில் மோதிக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் அணியுமே இறுதிப்போட்டியில் மோதிக் கொள்ள உள்ளனர்.
சாம்பியன் யார்?
இந்த தொடரை பொறுத்தவரையில் தொடர் தொடங்கியது முதலே இரு அணிகளும் மற்ற அணிகளை ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ப்ளே ஆஃப் சுற்றுக்கு மிக எளிதாக தகுதி பெற்ற இந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் நாளை இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளனர். இந்த தொடருக்காக ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர்கள் இருவர் நேருக்கு நேர் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ள உள்ளது இன்னும் விறுவிறுப்பை அதிகப்படுத்தியுள்ளது.
நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் ஸ்டார்க் - கம்மின்ஸ்:
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு கடந்தாண்டு இறுதியில் ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்தில் அதிக விலைக்கு போன வீரராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் விளங்கினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிட்செல் ஸ்டார்க்கை ரூபாய் 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலி வீரர் பாட் கம்மின்சை சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ரூபாய் 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பையை வெல்லவும் அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் அவர் மீதும் எதிர்பார்ப்பு எகிறியது. இதன் காரணமாகவே, நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் இவர்களை ஏலத்தில் எடுக்க பெரும் போட்டி நிலவியது. இதையடுத்து, மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணியும், பாட் கம்மின்சை சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் ஏலத்தில் எடுத்தனர்.
அசத்தப்போவது யார்?
கடந்த தொடரில் மிக மோசமாக ஆடிய சன்ரைசர்ஸ் அணி நடப்பு தொடரில் கம்மின்ஸ் தலைமையில் அசத்தலாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் குவாலிபயர் சுற்றில் அசத்தலாக பந்துவீசினார்.
இதனால், இந்த தொடரிலே அதிக தொகைக்கு ஏலம் போன இந்த வீரர்கள் இரண்டு பேரின் செயல்பாடுகளும் இறுதிப்போட்டியில் எப்படி இருக்கப்போகிறது என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கலாம். இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாகவே திகழ்வதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.