IPL Auction 2024: தொட்டதெல்லாம் ஹிட்டு.. அதனாலதான் ரூ.20.50 கோடி துட்டு.. பேட் கம்மின்ஸ்க்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்
IPL Auction 2024: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20 கோடியே 50 லட்சத்துக்கு நேற்று நடைபெற்ற ஏலத்தில் வாங்கியது.
IPL Auction 2024: துபாயில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி தங்களது அணிகளுக்குத் தேவையான வீரர்களை கோடிகளில் அள்ளி வருகின்றது. இதில் மிகவும் கவனம் ஈர்த்த வீரர் என்றால் அது ஆஸ்திரேலியா அணியின் முழு நேர கேப்டன் பேட் கம்மின்ஸ் என்றால் அது மிகையாகாது. இவர் ஆஸ்திரேலியா அணிக்காக இந்த ஆண்டு ஐசிசி நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றை பலமான இந்திய அணிக்கு எதிராக வென்று கொடுத்தவர். இவர் இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்கின்றார் என்பதால் அதிக விலைக்கு இவர் ஏலம் கூறப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது உண்மைதான். ஆனால் அந்த விலை யாருமே யோசித்திடாத விலை என்பது குறிப்பிடத்தக்கது. பேட் கம்மின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கியது.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸை எடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் போட்டி போட்டுக்கொண்டு இருந்தது. இவர்கள் இருவரும் மாறி மாறி ஏலம் கேட்டபோது மற்ற அணிகள் யாரும் மல்லுக்கட்ட முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணம் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே ரூபாய் 20 கோடி மற்றும் அதற்கு மேல் ஏலம் கேட்கப்பட்ட முதல் வீரர் பேட் கம்மின்ஸ். இவர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போக மிக முக்கிய காரணமே ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இவர் செய்த சம்பவங்கள்தான் முக்கிய காரணமே.
ஆஸ்திரேலியா வீரர்கள் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். அப்போது கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் முழுபொறுப்பையும் ஏற்று கேப்டன் பொறுப்பினை துறந்தார். இதன் பின்னர் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பொறுப்பு பேட் கம்ம்னிஸ் வசம் கொடுக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சு ஆல் - ரவுண்டரான பேட் கம்மின்ஸ் வசம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டபோது கிரிக்கெட் விமர்சகர்கள் சொன்னது, “ கிரிக்கெட் உலகையே ராஜ்ஜியம் செய்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பேட் கம்மின்ஸ் அணியை அதே வலிமையுடன் வழிநடத்துவாரா என்பது கேள்விக்குறிதான்” என கூறிவந்தனர்.
ஆனால் விமர்சகர்களின் விமர்சனங்களுக்கு எல்லாம் தனது கேப்டன்சியால் பதிலடி கொடுத்தவர். குறிப்பாக இந்த 2023ஆம் ஆண்டு மட்டும் அவரது கேப்டன்சியால் ஆஸ்திரேலியா அணி அடைந்த உச்சம் என்பது இதுவரை அடையாத உச்சம். ஆமாம், ஜூலை மாதத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பலமான இந்திய அணியை வீழ்த்தி மகுடம் சூடியது. இரண்டு முறை அதாவது 2021ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணிக்கு இது சாத்தியப்படவில்லை. ஆனால் பேட் கம்மின்ஸ் மிகத் திறமையாக அணியை வழிநடத்தி இந்திய அணியி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவை சுக்குநூறாக நொருக்கினார் பேட் கம்மின்ஸ்.
அதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான ஆஷஷ் டெஸ்ட் தொடரினை இங்கிலாந்து மண்ணில் சமன் செய்து ஒட்டுமொத்த இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இங்கிலாந்தில் நடக்கும் ஆஷஷ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணியால் வெல்ல முடியவில்லை என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகத்தால் சற்றும் நம்பமுடியவில்லை.
இதற்கு அடுத்துதான் தனது அணியுடன் இந்தியாவிற்குள் உலகக் கோப்பை ரேஸில் இறங்கினார் பேட் கம்மின்ஸ். தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது, கத்து குட்டி அணிகள் எல்லாம் ஆஸ்திரேலியாவைவிட புள்ளிகளிலும் ரன்ரேட்டிலும் முன்னிலையில் இருந்தது. இதனை பார்த்தபோது தமிழ் தொடங்கி அனைத்து மொழிகளில் உள்ள செய்தி நிறுவனங்கள், மீம் கிரியேட்டர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என அனைத்து தரப்பிலும் ” 5 முறை உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியின் நிலைமையைப் பார்த்தால் மிகவும் கவலை அளிக்கின்றது” என செய்திகளையும் பதிவுகளையும் பதிவிட்டு வந்தனர். ஆனால் அதன் பின்னர் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்த போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்ற இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “ நாளை எங்களின் நோக்கமே மைதானத்தில் உள்ள 1.30 லட்சம் இந்திய ரசிகர்களை ஒரு நிமிடம் அமைதியில் ஆழ்த்த வேண்டும்” என கூறியிருந்தார் கேப்டன் பேட் கம்மின்ஸ். இப்படி பேட் கம்மின்ஸ் கூறியது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் இந்திய அணி பேட் கம்மின்ஸின் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவே இல்லை. ஆனால் அவர் கூறியதை அவரே செய்து காட்டினார். விராட் கோலியை பேட் கம்மின்ஸ் தனது பந்தில் இன் - சைடு எஜ்ஜில் போல்ட் ஆக்கினார். இதனை சற்றும் எதிர்பாக்காத விராட் கோலி களத்தில் சில நொடிகள் ஏமாற்றத்தின் உச்சத்தில் இருந்தார். மைதானத்தில் கூடியிருந்த 1.30 லட்சம் இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியில் நிசப்தத்தில் மூழ்கினர். இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று எடுத்துச் சென்றார் பேட் கம்மின்ஸ்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஆஸ்திரேலியா அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் வென்றது. ஆஷஷ் டெஸ்ட் தொடரை பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் 2-2 என சமன் செய்தது. அதேபோல் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்தி 6வது உலகக் கோப்பையை பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட் கம்மின்ஸை ரூபாய் 20.50 கோடி கொடுத்து எடுத்ததற்கான காரணத்தை நாம் யூகிக்க முடிந்தாலும். ஹைதராபாத் அணியில் ஏற்கனவே எய்டன் மார்க்ரம் கேப்டன் பொறுப்பில் உள்ளார். மார்க்ரமிற்கு பதிலாக பேட் கம்மின்ஸிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்டால் ஹைதராபாத் அணி கொடுத்த தொகை வொர்த்.